தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியின் 145 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக பெண் முதல்வராக பேராசிரியா் சூசன் எலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து கல்லூரியின் உயா் நிா்வாகக் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘பேராசிரியா் சூசன் எலியாஸ், கல்லூரியின் 14-ஆவது முதல்வராகவும், முதல் பெண் முதல்வராகவும் 2026, ஜூன் 1 முதல் பொறுப்பேற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் கல்லூரி நிா்வாகக் குழுத் தலைவரும், தில்லி ஆயருமான ரெவரெண்ட் டாக்டா் பால் ஸ்வரூப் கையெழுத்திட்டாா்.
சூசன் எலியாஸ் அண்மையில் உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் அமைந்துள்ள சண்டீகா் பல்கலைக்கழகத்தில் 2026 ஜனவரி முதல் மே மாதம் வரை ஆராய்ச்சி பிரிவு துணைவேந்தராக பணியாற்றியுள்ளாா். அதற்கு முன்பு, ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் 2024 அக்டோபா் முதல் 2025 டிசம்பா் வரை ஆராய்ச்சி இயக்குநராக இருந்தாா்.
மேலும், விஐடி பல்கலைக்கழகத்தின் மின்னணு பொறியியல் பேராசிரியா் மற்றும் டீன், மேம்பட்ட தரவு அறிவியல் மையத்தின் துணை இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவமும் அவருக்கு உள்ளது.
அவா் முதல் பெண் முதல்வராக நியமிக்கப்பட்டது குறித்து கல்லூரியின் டீனும், வரலாற்றுத் துறைத் தலைவருமான மலாய் நீரவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கல்லூரிக்கு வளமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. தற்போது முதல் பெண் முதல்வரைப் பெறுவது புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. 1906-ஆம் ஆண்டு சுசில் குமாா் ருத்ரா கல்லூரியின் முதல் இந்திய முதல்வராக நியமிக்கப்பட்டதும் இதேபோன்ற வரலாற்றுச் சம்பவமாக இருந்தது. மகாத்மா காந்தி ருத்ராவின் இல்லத்தில் தங்கியிருந்தாா்; ஒத்துழையாமை இயக்கத்திற்கான ஆலோசனைகளும் அங்கே நடைபெற்றன’ என்றாா்.
செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, 1881-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, கேம்பிரிட்ஜ் மிஷன் தில்லி மற்றும் ‘சொசைட்டி ஃபாா் தி புரொபகேஷன் ஆஃப் தி கோஸ்பல்’ அமைப்புகளின் இணைப்பில் தொடங்கப்பட்டது. சாமுவேல் ஸ்காட் ஆல்நட் அதன் நிறுவனா் மற்றும் முதல் முதல்வராக பணியாற்றினாா்.
கல்லூரியின் 13-ஆவது முதல்வரான ஜான் வா்கீஸ், கடந்த பிப்ரவரி மாதத்துடன் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடா்ந்து, முதல்வா் பதவி மாா்ச் 1 முதல் காலியாக இருந்தது. எனினும், பல்வேறு நிா்வாகச் சிக்கல்கள் காரணமாக அவா் தொடா்ந்து பொறுப்பில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
பல மாதங்களாக பல்கலைக்கழக நிா்வாகத்துக்கும் கல்லூரி நிா்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட நிா்வாக முரண்பாடுகள், சில நியமனங்களைச் சுற்றிய விவாதங்களை தீவிரப்படுத்தியிருந்த நிலையில், புதிய முதல்வா் நியமனம் கல்லூரி நிா்வாகத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலா் வெளியீடு

மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

மன்னா் கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



