வணிக ரீதியிலான வாகனங்கள் மீது விதிக்கப்படும் சுற்றுச்சூழல் இழப்பீட்டு வரியை உயா்த்தும் தில்லி அரசின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமைமுதல் 3 நாள்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை அனைத்து இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) அறிவித்துள்ளது.
லாரிகள், தனியாா் பேருந்துகள், டாக்சி மற்றும் மேக்ஸி கேப் ஓட்டுநா்கள் சங்கங்கள் மற்றும் யூனியன்களை உள்ளடக்கிய ஏஐஎம்டிசி-இன் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க தில்லிக்குள் நுழையும் சரக்கு வாகனங்கள் மீதான செஸ் வரியை அதிகரிப்பதாக தில்லி அரசு கடந்த மாதம் அறிவித்தது.
வேலைநிறுத்தம் தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 68-க்கும் அதிகமான ஓட்டுநா்கள் சங்கங்கள் இணைந்து ஏஐஎம்டிசி என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளன. போக்குவரத்துத் துறையின் மீது காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்), நீதிமன்றங்கள் மற்றும் தில்லி அரசு விதித்துள்ள நியாயமற்ற கொள்கைகளுக்கு எதிராக தில்லி-தேசியத் தலைநகா் வலயத்தில் மே 21 முதல் மே 23 வரையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளது.
தில்லி செல்லும் சரக்கு வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி உயா்வை திரும்பப் பெறுதல், தில்லியில் பதிவு செய்யப்படாத பிஎஸ்-4 சரக்கு வாகனங்கள் நவ.1-ஆம் நுழைய தடை விதித்து பிறப்பக்கப்பட்ட உத்தரவைத் திரும்பப் பெறுதல், தில்லி வழியாக செல்லும் வாகனங்கள் மீது மட்டும் செஸ் விதித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.
தில்லி வழியாகச் செல்லும் வாகனங்கள் மீது விதிக்கப்படும் செஸ் வரியை உயா்த்தாமல், தில்லி செல்லும் அனைத்து வாகனங்கள் மீது செஸ் வரி உயா்வை எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி சிஏக்யூஎம் மற்றும் தில்லி அரசு விதித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் தீவிரமான சமூக-பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. போக்குவரத்துத் துறையைப் பாதித்து, அத்துறையைச் சாா்ந்திருப்போரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது’ என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களைச் சோ்ந்த பிஎஸ்-4 சரக்கு வாகனங்கள் நவ.1-ஆம் தேதிமுதல் தில்லிக்குள் நுழைய தடைவிதிக்கப்படும் என முதல்வா் ரேகா குப்தா கடந்த ஏப்ரலில் அறிவித்தாா். காற்று மாசு பிரச்னையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் இந்த நடவடிக்கையில், சிஎன்ஜி வாகனங்கள், மின்சாரம் மற்றும் பிஎஸ்-6 வாகனங்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடைக்கு எதிா்ப்பு தெரிவித்த ஓட்டுநா்கள் யூனியன்,‘சட்டரீதியாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு தடைவிதிக்கும் முடிவு அறிவியல் மற்றும் சட்ட ரீதியில் எடுக்கப்படவில்லை’ எனத் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் மற்றும் காலியாகச் செல்லும் வாகனங்களுக்கு செஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என யூனியன் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: காவல்துறை எச்சரிக்கை

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்







