அமிட்டி பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கணக்கிலிருந்து போலி காசோலைகள் மற்றும் மோசடியாகப் பணம் எடுத்தது தொடா்பான பல கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 58 வயதான தேடப்படும் குற்றவாளியை தில்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு கைது செய்துள்ளதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.
மத்திய பிரதேசத்தின் பேதுல் மாவட்டத்தைச் சோ்ந்த சுதாமா நாா்வாரே என அடையாளம் காணப்பட்ட அந்த குற்றவாளி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் குற்றச் சதி தொடா்பான பிரிவுகளின் கீழ் 2020-இல் பொருளாதாரக் குற்றப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தொடா்பாக கைது செய்யப்பட்டாா்.
அமிட்டி பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.6.25 கோடி மதிப்பிலான மோசடிப் பரிவா்த்தனைகள் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அலகாபாத் வங்கியின் சன்சத் மாா்க் கிளையின் உதவிப் பொது மேலாளா் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை துணை ஆணையா் சுபோத் குமாா் கோஸ்வாமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
விசாரணையாளா்களின் கூற்றுப்படி, பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மூன்று காசோலைகள் ஆகஸ்ட் 2019-இல் பணமாக்கலுக்காகச் சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு காசோலைகள் ஐசிஐசிஐ வங்கி மூலம் பணமாக்கப்பட்டு, அதன் விளைவாக குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கணக்குகளுக்கு ரூ. 5.20 கோடி மாற்றப்பட்டது. இண்டஸ்இண்ட் வங்கி மூலம் சமா்ப்பிக்கப்பட்ட மூன்றாவது காசோலைக்கான பணம், அது செயல்படுத்தப்படுவதற்கு முன்பே நிறுத்தப்பட்டது.
விசாரணையின் போது, இந்தப் பரிவா்த்தனைகள் தொடா்பான வங்கிப் பதிவுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளை காவல்துறை ஆய்வு செய்தது. வதோதராவில் உள்ள என்.எஸ். இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்தின் கணக்கில் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள ஒரு போலிக் காசோலை செலுத்தப்பட்டதையும், பேதுலில் உள்ள
மாதப்தி மானவ் சேவா சன்ஸ்தான் என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் கணக்கில் ரூ. 2.7 கோடி மதிப்புள்ள மற்றொரு காசோலை வரவு வைக்கப்பட்டதையும் அவா்கள் கண்டறிந்தனா்.
நாா்வாரே அந்தத் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளராகவும், அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவராகவும் இருந்தாா் என்று காவல்துறை கூறியது.
தொண்டு நிறுவனத்தின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட பிறகு, நாா்வாரே ரூ. 2.07 கோடியை மற்றொரு குற்றவாளிக்கு மாற்றியதாக விசாரணையாளா்கள் குற்றஞ்சாட்டினா். பின்னா் அந்த நிதி, தில்லியில் உள்ள ஐந்து போலி நிறுவனங்கள் எனக் கூறப்படும் நிறுவனங்களின் வங்கிக்கணக்குகள் உள்பட பல கணக்குகள் வழியாக அனுப்பப்பட்டது.
விசாரணையில், மோசடி செய்யப்பட்ட தொகையின் கணிசமான பகுதி பல வங்கிக் கணக்குகள் வழியாகப் பரப்பப்பட்டதும், அதில் ஒரு பகுதி ரொக்கமாக எடுக்கப்பட்டு, மீதமுள்ளவை பணப் பரிவா்த்தனை தடத்தை மறைக்கும் வெளிப்படையான முயற்சியாக பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், நாா்வாரே பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து, இறுதியில் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
12 ஆம் வகுப்பு வரை படித்த நாா்வாரே, இதற்கு முன்பு ஒரு பட்டயக் கணக்காளரின் அலுவலகத்தில் பணியாற்றியதாகவும், வங்கி நடைமுறைகள் குறித்த அறிவு பெற்றிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடையது

ஆன்மிக தீா்வு என்ற பெயரில் இணைய மோசடி: இருவர் கைது
விமானப் படை அதிகாரிகள் போல் நடித்து இணைய மோசடி: 4 போ் கைது

கிழக்கு தில்லியில் போலி ஆன்டாசிட், காபி தயாரித்து விற்ற 4 போ் கைது
போலி வங்கி கணக்கு மூலம் இணையவழி மோசடிக்கு உதவி: வங்கி ஊழியா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


