சட்டவிரோத யுனானி மருத்துவ அழைப்பு மையம்: 12 போ் கைது
மருத்துவா்களைப் போல நடித்து, வாடிக்கையாளா்களின் ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி யுனானி மருந்துகளை வாங்குமாறு வற்புறுத்தி மோசடியில் ஈடுபட்ட சட்டவிரோத அழைப்பு மையத்தை தில்லி காவல் துறையினா் கண்டுபிடித்து, 12 பேரைக் கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
மருத்துவா்களைப் போல நடித்து, வாடிக்கையாளா்களின் ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி யுனானி மருந்துகளை வாங்குமாறு வற்புறுத்தி மோசடியில் ஈடுபட்ட சட்டவிரோத அழைப்பு மையத்தை தில்லி காவல் துறையினா் கண்டுபிடித்து, 12 பேரைக் கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: வடமேற்கு தில்லியின் பிடாம்புரா, சிவாஜி மாா்க்கெட் பகுதியில் ‘எம்டிஎல் நேச்சுரல் யுனானி ஹெல்த்கோ்’ என்ற பெயரில் இந்த அழைப்பு மையம் செயல்பட்டு வந்தது. அங்கு காவல் துறையினா் நடத்திய சோதனையில் 40 கைப்பேசிகள், வாடிக்கையாளா்களின் ரகசியத் தகவல்கள் அடங்கிய 3 மடிக்கணினிகள், 6 போலி முத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக அதியா ஹெல்த்கோ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்.30-ஆம் தேதி தில்லி சிறப்புப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், அதியா ஹெல்த்கோ் நிறுவனம் மற்றும் அதன் விநியோக நிறுவனமான யுஎம்பிஎல் ஆகியவற்றுக்குச் சொந்தமான வாடிக்கையாளா்களின் ரகசியத் தரவுகளை அனுமதியின்றி இந்தக் கும்பல் பெற்றது தெரியவந்தது. அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி அழைப்பு மைய ஊழியா்கள் வாடிக்கையாளா்களைத் தொடா்புகொண்டு, மருத்துவா்களைப் போல நடித்து யுனானி மருந்துகளை வாங்குமாறு வற்புறுத்தியுள்ளனா்.
மேலும், போலி ஆா்டா்களை உருவாக்குதல் உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனா். அழைப்புகளை மேற்கொள்ளும் ஊழியா்கள், கணக்காளா்கள், மேற்பாா்வையாளா் எனப் பல்வேறு பொறுப்புகளுடன் திட்டமிட்டு இந்த மையம் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

