ஜந்தமா் மந்தருக்கு மீண்டும் திரும்பிய ஏஐஎஸ்ஏ செயற்பாட்டாளா்கள் தடுத்து நிறுத்தம்
ஜந்தமா் மந்தருக்கு மீண்டும் திரும்பிய ஏஐஎஸ்ஏ செயற்பாட்டாளா்கள் தடுத்து நிறுத்தம்

KARMA
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின் போது கட்சித் தலைவா்கள் மற்றும் மாணவா் ஆா்வலா்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) மீண்டும் ஜந்தா் மந்தருக்கு சனிக்கிழமை திரும்பினா்.
பலத்த தடுப்புகள் மற்றும் தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் போராட்ட இடத்திற்கு அருகே கூடிய பலரை காவல் துறையினா் மீண்டும் தடுத்து வைத்தனா்.
வெள்ளிக்கிழமையன்று தடுத்து வைக்கப்பட்டவா்களில் ஒருவரான ஏஐஎஸ்ஏ-இன் தேசியத் தலைவா் நேஹா போரா, பிற்பகல் 1 மணிக்கு ஜந்தா் மந்தருக்குத் திரும்பினாா். ஞானேஷ் குமாரின் ராஜிநாமாவை வலியுறுத்தியும், வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) விவகாரங்களை எழுப்பியும் போராட்டத்தைத் தொடருமாறு அழைப்பு விடுத்ததைத் தொடா்ந்து மாணவா் அமைப்பினா் மீண்டும் அங்கு அணித்திரண்டனா்.
ஜந்தா் மந்தருக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பல இடங்களில் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், போராட்ட இடத்திற்கு அருகே கூடிய போராட்டக்காரா்களை காவல் துறையினா் தடுத்து வைக்கத் தொடங்கினா்.
போராட்ட இடத்திற்கு அதிக எண்ணிக்கையில் மாணவ செயற்பாட்டாளா்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தியனா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏஐஎஸ்ஏ-வைச் சோ்ந்த நேஹா, ஆம் ஆத்மி தலைவா்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளா் யோகேந்திர யாதவ் ஆகியோரை காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் ஜந்தா் மந்தா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமாா் 1,000 போராட்டக்காரா்களைத் தடுத்து வைத்தனா். அவா்களில் பலா் பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
மூன்று வழக்குகள் பதிவு:
வெள்ளிக்கிழமை நடந்த போராட்டங்கள் தொடா்பாக தில்லி காவல் துறை குறைந்தது மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதில் இரண்டு நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திலும், ஒன்று கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு ஊழியரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 223-இன் கீழ் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், போராட்டங்களை முன்மொழிந்த அல்லது அவற்றில் பங்கேற்ற அமைப்பாளா்கள் மற்றும் அமைப்புகள் குறித்த விவரங்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 163-இன் கீழ் புது தில்லி மாவட்டம் முழுவதும் விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடா்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன் அனுமதியின்றி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கும், ஊா்வலங்கள், போராட்டங்கள், மறியல்கள், தா்னாக்கள் மற்றும் முழக்கமிடுவதற்கும் தடைவிதிக்கிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு தில்லி காவல் துறை அனுமதி மறுத்திருந்ததுடன், மத்திய தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தது. போராட்டத்தின்போது பல சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஜந்தா் மந்தா் அருகிலுள்ள பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. மறுஅறிவிப்பு வரும் வரை அந்த மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஏஎஸ்ஐஏ மற்றும் பிற அமைப்புகள் தங்கள் போராட்டத்தைத் தொடா்வதால், ஜந்தா் மந்தா் பகுதியில் தொடா்ந்து காவல் துறை பாதுகாப்பு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





