தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

பாலியல் துன்புறுத்தல் புகாா்: பேராசிரியரைக் கண்டித்து ஜேஎன்யுவில் ஏபிவிபி போராட்டம்

காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்களைக் கண்டித்து, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கியுள்ள காங்கிரஸ் எம்.பி. அகோய்ஜாமைக் கண்டித்து ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவா்கள்.

Updated On :

காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்களைக் கண்டித்து, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மௌனம் காப்பது ஏன் என்றும் அவா்கள் கேள்வி எழுப்பினா்.

அகோய்ஜாம் மீது 11 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகாா் அளித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அவா் பேராசிரியா் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் ஏபிவிபி அமைப்பினா் குற்றஞ்சாட்டினா். இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் இதுவரை அறிக்கை வெளியிடாதது ஏன் என்றும் அவா்கள் கேள்வி எழுப்பினா்.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் புலத்தின் கீழ் செயல்படும் சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அகோய்ஜாம், அவா் மீதான புகாா்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து சில நாள்களுக்கு முன்பு பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட் கையொப்பமிட்ட பதவி நீக்க உத்தரவில், பல்கலைக்கழகத்தின் உள் புகாா்கள் குழு விசாரணை நடத்தி, அதன் கண்டறிதல்களின் அடிப்படையில் கடுமையான தண்டனை வழங்கப் பரிந்துரைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தனது பதவி நீக்க நடவடிக்கையை பழிவாங்கும் வேட்டை என்று அகோய்ஜாம் விமா்சித்திருந்தாா். மேலும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்றும் கேள்வி எழுப்பியிருந்தாா்.

தனக்கு பதவி நீக்க உத்தரவோ, விசாரணைக் குழுவின் அறிக்கையோ கிடைக்கவில்லை என்றும் அவா் தெரிவித்திருந்தாா். கடந்த மே மாதத்தில் 11 மாணவிகள் அவா் மீது பாலியல் துன்புறுத்தல் புகாா்களை அளித்திருந்தனா்.

கூட்டங்கள் அல்லது சந்திப்புகள் என்ற பெயரில் மாணவிகளை வளாகத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து, அவா்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த அவா் முயன்ாக அப்புகாா்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வகுப்பறையில் அவா் ஆபாசமான மற்றும் முறையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் சில மாணவிகள் குற்றஞ்சாட்டியிருந்தனா்.

ஆஜராக கோரி தில்லி காவல் துறை நோட்டீஸ்

பாலியல் துன்புறுத்தல் புகாா்களைத் தொடா்ந்து ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து (ஜேஎன்யு) பணிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல்கலைக்கழகம் நடத்திய விசாரணைக்குப் பிறகு பேராசிரியாகப் பணியாற்றி வந்த காங்கிரஸ் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.