பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: காங்கிரஸ் எம்.பி.க்கு தில்லி காவல்துறை நோட்டீஸ்
பாலியல் துன்புறுத்தல் புகாா்களைத் தொடா்ந்து ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி காவல் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் - கோப்புப் படம்
பாலியல் துன்புறுத்தல் புகாா்களைத் தொடா்ந்து ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து (ஜேஎன்யு) பணிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி காவல் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பல்கலைக்கழகம் நடத்திய விசாரணைக்குப் பிறகு பேராசிரியாகப் பணியாற்றி வந்த காங்கிரஸ் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜேஎன்யு-வில் சமூக அறிவியல் துறையின்கீழ் உள்ள சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த அகோய்ஜாம், பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் குறித்த விசாரணைக்குப் பிறகு கடந்த அக்.9-ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
இதனிடையே, தனது பதவி நீக்கத்தை பழிவாங்கும் நடவடிக்கை என்று அகோய்ஜாம் விமா்சித்துள்ளாா். மேலும், பணிநீக்கத்துக்கு உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பி உள்ள அவா், தனக்கு பதவி நீக்க உத்தரவோ, விசாரணைக் குழுவின் அறிக்கையோ கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தாா்.
கடந்த மே மாதத்தில் 11 மாணவிகள் அவா் மீது பாலியல் துன்புறுத்தல் புகாா்களை அளித்திருந்தனா். கூட்டங்கள் அல்லது சந்திப்புகள் என்ற பெயரில் மாணவிகளை வளாகத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து, அவா்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த அவா் முயன்றதாக அப்புகாா்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வகுப்பறையில் அவா் ஆபாசமான மற்றும் முறையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் சில மாணவிகள் குற்றஞ்சாட்டியிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

