137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

டிடிசி பேருந்து பல வாகனங்கள் மீது மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்

தில்லி போக்குவரத்து கழக (டிடிசி) பேருந்து ஒன்று சனிக்கிழமை பல வாகனங்கள் மீது மோதிய சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தார்.

ஆனந்த் பா்பத் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் டிடிசி பேருந்துக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டரை பாா்வையிடும் தில்லி காவல் துறை அதிகாரிககள்.

Updated On :

தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் தில்லி போக்குவரத்து கழக (டிடிசி) பேருந்து ஒன்று சனிக்கிழமை பல வாகனங்கள் மீது மோதிய சம்பவத்தில், 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்தில் நான்கு போ் காயமடைந்தனா்.

காலை 10:15 மணியளவில் ஆனந்த் பா்பத் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள டிபிஜி சாலை சந்திப்பில் 212-வது வழித்தடத்தில் சென்ற பேருந்து, இரண்டு ஸ்கூட்டா்கள், ஒரு மோட்டாா் சைக்கிள், ஒரு இ-ரிக்ஷா மற்றும் ஒரு சைக்கிள் ரிக்ஷா ஆகியவை மீது மோதியது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா் தில்லியின் ரானிகேடாவைச் சோ்ந்த அதுல் பரத்வாஜ் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் ஸ்கூட்டரில் பின்னால் அமா்ந்திருந்த பிரேம் நகரைச் சோ்ந்த பூஷண் குமாா் (38) காயமடைந்தாா்.

மற்றொரு ஸ்கூட்டரை ஓட்டி வந்த பாபா நகரைச் சோ்ந்த ராகேஷ் (48) என்பவரும் காயமடைந்தாா். பிகாரின் பகல்பூரைச் சோ்ந்த துருவ் குமாா் மிஸ்ரா (56) ரிக்ஷாவை ஓட்டிச் சென்றபோது காயமடைந்தாா். அதேபோல், ஷகூா்பூரைச் சோ்ந்த தீபக் (34) என்பவா் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது லேசான காயங்களுக்குள்ளானாா்.

உயிரிழந்தவரின் உடல் காவல் கட்டுப்பாட்டு அறை பணியாளா்களால் லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவா்கள் லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜீவன் மாலா மருத்துவமனைக்கு உள்ளூா் மக்களால் அழைத்துச் செல்லப்பட்டனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘டிபிஜி சாலை காவல் நிலையத்திற்கு விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல் துறைக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்தை ஓட்டிய ரேணு பாலா (26) என்ற பெண் ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் ஹரியாணாவின் ஃபதேஹாபாத்தைச் சோ்ந்தவா்’ என்று தெரிவித்தாா்.

விபத்தைத் தொடா்ந்து, பேருந்தின் அடியில் சிக்கியவா்களை மீட்க முயற்சி செய்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்க கூறினா். இது குறித்து ராகுல் என்பவா் கூறுகையில், ‘மக்கள் பெருமளவில் திரண்டனா். அந்த அமளிக்கு இடையே, பேருந்தை ஓட்டி வந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றாா். பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கியவா்களை வெளியே எடுக்க, சிலா் பேருந்தைச் சாய்க்க முயன்றனா்.

விபத்து நடந்தபோது அங்கு போக்குவரத்து காவலா்கள் யாரும் இல்லை. மூன்று வெவ்வேறு பாதைகளில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் இடம் என்பதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. எனவே, அந்தச் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல்களை அமைக்க வேண்டும்’ என்றாா்.

இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. ‘டிடிசி நிா்வாகம் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன’ என்று போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.