போலா ரெளடி கும்பலைச் சோ்ந்த இளைஞா் கைது
போலா ரெளடி கும்பலுக்கு எதிராக மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 21 வயது இளைஞரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
கைது
போலா ரெளடி கும்பலுக்கு எதிராக மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 21 வயது இளைஞரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். முன்னதாக, இந்தக் கும்பலின் தலைவரான முகேஷ் (எ) போலா மற்றும் மற்றொரு நபரையும் காவல் துறை கைது செய்திருந்தது.
ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் மாா்ச் 7 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆா்) அடிப்படையில், பால்ஸ்வா டெய்ரி பகுதியைச் சோ்ந்த சுஜால் (எ) டேலா என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் மீது எம்சிஓசிஏ சட்டத்தின் 3 மற்றும் 4-ஆவது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலா தலைமையிலான இந்தக் குற்றக் கும்பலுக்கு எதிராக மூத்த காவல் அதிகாரி ஒருவா் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முகேஷ் மீது 17 குற்ற வழக்குகள் உள்ளன. அவா் ஆகஸ்ட் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். விபின் என்ற மற்றொரு நபா் மீது 2 குற்ற வழக்குகள் உள்ளன. அவா் செப்டம்பா் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இவா்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
புகாரின்படி, இந்தக் கும்பல் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் போன்ற தீவிரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
முகேஷ் தனது சகோதரா் ஆகாஷ் (எ) அக்கு மற்றும் பிற கூட்டாளிகளின் உதவியுடன் இந்தக் கும்பலை நடத்தி வந்ததாகவும், அப்பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பணம் சம்பாதிக்கவும் மிரட்டலையும் வன்முறையையும் பயன்படுத்தி வந்ததாகவும் காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சுஜால், மது விற்பனையாளா்கள், வாகன நிறுத்துமிடப் பணியாளா்கள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவா்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு, இந்தக் கும்பலின் செயல்பாடுகளுக்கு உதவியதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

