தில்லி பல்கலை. தெற்கு வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து தோட்டப் பணியாளா் உயிரிழப்பு
தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் மரங்களை வெட்டிச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதுடைய தனியாா் தோட்டப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பலி - பிரதிப் படம்
தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் மரங்களை வெட்டிச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதுடைய தனியாா் தோட்டப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
திங்கள்கிழமை மாலை 5:30 மணியளவில், அந்த நபா் உயிரிழந்தது குறித்த தகவல் தெற்கு வளாகக் காவல் நிலையத்திற்குக் கிடைத்ததாகக் காவல் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினா், அந்த நபரை சஃப்தா்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவா் பல்கலைக்கழக வளாகத்தில் தனியாா் தோட்டப் பணியாளராகப் பணியாற்றி வந்ததும், மரங்களைச் சீரமைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் அவா் உயிரிழந்ததும் தெரிய வந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தெற்கு வளாகக் காவல் நிலையத்தில் செப்.7-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேல்விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்தது.
உயிரிழந்தவரின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இதற்குப் பொறுப்பானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
மேலும், உயிரிழந்தவரின் மனைவிக்கு வேலைவாய்ப்பு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



