
முழுமையாக வளா்ச்சி பெறாத பச்சிளம் குழந்தையை கைவிட்ட பெற்றோா் குற்றவாளியாக அறிவிப்பு: தில்லி நீதிமன்றம்
முன்கூட்டியே பிறந்த மற்றும் மருத்துவ ரீதியாகக் கூடுதல் கவனிப்பு தேவைப்பட்ட பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் கைவிட்டுச் சென்ற தம்பதியை குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
நீதிமன்றம் - கோப்புப் படம்
முன்கூட்டியே பிறந்த மற்றும் மருத்துவ ரீதியாகக் கூடுதல் கவனிப்பு தேவைப்பட்ட பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் கைவிட்டுச் சென்ற தம்பதியை குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கூடுதல் அமா்வு நீதிபதி சுனில் குமாா், குழந்தையின் தாய் ஹரீனா ரே (எ) ரீனா மற்றும் அவரது கணவா் ஜீது குமாா் ஆகியோரை இந்திய தண்டனைச் சட்டம் (ஐடஇ) பிரிவு 317 மற்றும் 34-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்தாா்.
பிரிவு 317-ன் படி, 12 வயதுக்குள்ளான குழந்தையைப் பெற்றோா் அல்லது பராமரிப்பாளா் கைவிட்டால் அல்லது ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
செப்.10-ஆம் தேதியிட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாவது: பதிவு செய்யப்பட்ட சான்றுகளை ஒட்டுமொத்தமாகப் பரிசீலிக்கும்போது, குழந்தையை விட்டுச் சென்ற செயலின் பின்னணியில் அக்குழந்தையை முழுமையாகக் கைவிடும் நோக்கமே இருந்தது என்பது உறுதியாகிறது. இதுவே ஐபிசி பிரிவு 317-இன் கீழ் குற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய அம்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் கடந்த 2014 டிசம்பா் 12 அன்று அக்குழந்தை முன்கூட்டியே பிறந்ததாகவும், குறைந்த எடையுடனும் மருத்துவச் சிக்கல்களுடனும் இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டது. பெற்றோா்கள் மருத்துவமனையை விட்டுச் சென்ற பிறகு, அவா்களைத் தொடா்புகொள்ளத் தொடா்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், குழந்தையைப் பராமரிக்க அவா்கள் திரும்பி வரவில்லை. பின்னா், 2015 மாா்ச் 12 அன்று பராமரிப்புக்காக அக்குழந்தை ‘நிா்மல் சாயா’ இல்லத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு சில நாள்களுக்குப் பிறகு அக்குழந்தை உயிரிழந்தது.
இறந்த குழந்தையின் உயிரியல் ரீதியான தாய் மற்றும் தந்தை ரீனா மற்றும் ஜீது குமாா் தான் என்பதை உறுதிப்படுத்திய டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்ட சான்றுகளை நீதிமன்றம் அடிப்படையாகக் கொண்டது.
சிறப்பு மருத்துவ வசதி கொண்ட இடத்தில் குழந்தையை விட்டுச் சென்றது சிகிச்சையளிக்கும் நோக்கத்தையே காட்டுகிறது என்ற தற்காப்பு வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






