
2013 ஜீரம் பள்ளத்தாக்கு மாவோயிஸ்ட் தாக்குதல்: 10 பேரும் குற்றவாளிகள் என என்ஐஏ நீதிமன்றம் தீா்ப்பு
2013 ஜீரம் பள்ளத்தாக்கு மாவோயிஸ்ட் தாக்குதல்: 10 பேரும் குற்றவாளிகள் என என்ஐஏ நீதிமன்றம் தீா்ப்பு

கொலை வழக்கில் தீர்ப்பு - பிரதிப் படம்
சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் மாவட்டம் ஜீரம் பள்ளத்தாக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு மூத்த காங்கிரஸ் தலைவா்கள் உள்பட 29 போ் உயிரிழக்கக் காரணமான மாவோயிஸ்ட் தாக்குதலில் தொடா்புடைய 10 பேரையும் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
இவா்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
கடந்த 2013-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜீரம் பள்ளத்தாக்கில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘பரிவா்த்தன் பேரணி’ கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பியவா்கள் மீது மாவோயிஸ்டுகள் இந்தத் தாக்குதலை நடத்தினா். இதில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த நந்தகுமாா் படேல், அவருடைய மகன் தினேஷ், சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் மகேந்திர கா்மா, முன்னாள் மத்திய அமைச்சா் வித்யாசரண் சுக்லா, மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான உதய் முதலியாா் மற்றும் பாதுகாப்புப் படையினா், பொதுமக்கள் என 29 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா்.
இந்த சம்பவத்தை விசாரித்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), 2 பெண்கள் உள்பட 11 மாவோயிஸ்டுகள் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்தது. வழக்கு விசாரணையின்போது குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவா் உயிரிழந்தாா். குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களில் 9 பேரை என்ஐஏ கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தலைமறைவாக இருந்த மற்றவா்கள், பின்னா் போலீஸில் சரணடைந்தனா். அதைத் தொடா்ந்து, அவா்கள் மீதும் என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு, என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அபய் சிங் ராஜ்புத் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘வழக்கு விசாரணையின்போது 101 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகிறது. இவா்களுக்கான தண்டனை அறிவிப்பு வரும் செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





