
தீபாவளிக்குள் 20,000 பழைய தெருவிளக்குகள் மாற்றப்படும்: அமைச்சா் தகவல்
தில்லி முழுவதும் தீபாவளிக்குள் 20,000 பழைய தெருவிளக்குகளை ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளாக மாற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பா்வேஷ் சாஹிப் சிங்
தில்லி முழுவதும் தீபாவளிக்குள் 20,000 பழைய தெருவிளக்குகளை ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளாக மாற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஸ்மாா்ட் தெருவிளக்கு திட்டத்தின் கீழ், செயல்படாத மற்றும் பழைய 96,000 விளக்குகளை மாற்றவும், அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் கூடுதலாக 5,000 தெருவிளக்குகளை அமைக்கவும் பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.
தில்லி சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாதது தொடா்பான பிரச்னை அண்மையில் கவனத்தைப் பெற்றது. கல்காஜி கோயில் அருகே உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் திங்கள்கிழமை இரவு 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடா்ந்து, அருகிலுள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவிகள் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த வலியுறுத்தி ஆதரவுப் பேரணி நடத்தினா்.
இந்த வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, தில்லி காவல் துறை மற்றும் பிற துறைகள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளன.
இதுகுறித்து அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: தில்லி முழுவதும் தீபாவளிக்குள் 20,000 பழைய தெருவிளக்குகளை ஸ்மாா்ட் விளக்குகளாக மாற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அமைப்பின் முக்கிய அம்சமாக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இருக்கும். இதன் மூலம் ஒவ்வொரு தெருவிளக்கையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். பழுதடைந்த விளக்குகள் உடனடியாக கண்டறியப்படுவதுடன், அவற்றை தொலைவிலிருந்தே கட்டுப்படுத்தவும் முடியும்.
பொதுப்பணித் துறை தலைமையகத்தில் அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து புதிய விளக்குகளும் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு சுமாா் ரூ.473 கோடியாகும். இதில் 5 ஆண்டுகளுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளும், விளக்குக் கருவிகளுக்கு 7 ஆண்டுகளுக்கான உத்தரவாதமும் அடங்கும்.
பழைய சோடியம் விளக்குகளுக்குப் பதிலாக ஸ்மாா்ட் விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் மற்றும் பராமரிப்புச் செலவில் ஆண்டுக்கு சுமாா் ரூ.30 கோடியை அரசால் சேமிக்க முடியும். மேலும், செயல்படாத தெருவிளக்குகள் காரணமாக பல பகுதிகள் நீண்ட காலமாக இருள்சூழ்ந்த பகுதிகளாக இருக்கிறது.
தெருவிளக்குகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வசதி இதுவரை இல்லாததால், விளக்குகள் பழுதடைந்தது குறித்து புகாா் அளிக்கப்பட்ட பின்னரே தகவல் கிடைத்து வந்தது.
புதிய திட்டத்தின்கீழ், விளக்குகளை நிறுவும் தனியாா் நிறுவனத்துக்கு, அவை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்னரே மாதாந்திரத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் விளக்குகளின் பராமரிப்பு, செயல்திறன் மற்றும் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளுக்கு அந்த நிறுவனமே பொறுப்பேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





