திருநெல்வேலி, ஜூன் 26: டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்துக் கழகத்தின் செலவினம் அதிகரித்து நஷ்டம் அதிகமாகும் என்பதோடு, தொழிலாளர்களின் பணப்பலன்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசானது வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இதில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2, மண்ணெண்ணெய் விலை ரூ. 3, சமையல் எரிவாயு விலை ரூ. 35 உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் தற்போதைய டீசல் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளும், தொழிலாளர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தில் (திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்) சுமார் 820 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களை இயக்க நாளொன்றுக்கு சுமார் 72,000 லிட்டர் டீசல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு கூடுதலாக ரூ. 1.44 லட்சம் செலவாகும். மாதத்திற்கு சுமார் ரூ. 43.20 லட்சம் கூடுதல் செலவாகும். இந்த மண்டலத்தில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் ஒரு நாள் வருமானம் சுமார் ரூ. 45 லட்சம் ஆகும். எனவே, டீசல் வகையில் கூடுதல் செலவுக்காக ஒரு நாள் வருமானத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நஷ்டம் அதிகரிக்கும்: அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெரும்பாலானவை நஷ்டத்தில் இயங்கி வருவது யாவரும் அறிந்த ஒன்றுதான். திருநெல்வேலி மண்டலத்தில் இதுவரை ஒட்டுமொத்த நஷ்டம் ரூ. 100 கோடிக்கும் அதிகம். எரிபொருள் சேமிப்பு, மனித வள மேலாண்மை, தொழிலாளர்களுக்கு பயிற்சி, பஸ்களை அதிகபட்சம் இயக்குதல் போன்ற மேம்பட்ட செயல்பாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், கடந்த ஆண்டின் நஷ்டம் மட்டும் ரூ. 38 கோடி என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போதைய டீசல் விலை உயர்வால் இந்த நஷ்டம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தைக் குறைக்க கட்டணத்தை உயர்த்தி ஈடுகட்ட நினைத்தாலும் அரசியல் காரணங்களுக்காக நேரடியாக கட்டணத்தை உயர்த்தாமல் மதிப்பூட்டிய சேவை எனக் கூறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் நஷ்டத்தைக் குறைக்க முடியாமல் திணறி வரும் வேளையில் டீசல் விலை உயர்வு போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஊழியர்கள் அச்சம்: டீசல் விலை உயர்வு போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துவதோடு தொழிலாளர்களையும் நேரடியாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மண்டலத்தில் சுமார் 6 ஆயிரம் ஊழியர்களும், தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு வகையிலும் பாதிப்பு ஏற்படும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அச்சம் தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நிதிச்சுமை ஏற்படும்போது நிர்வாகம் மறைமுகமாக தொழிலாளர்களின் சலுகைகளில் கை வைக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர். மேலும், தொழிலாளர் நலத் திட்டங்களும் பாதிக்கப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.
தொழிலாளர்களுக்கு காப்பீடுகளுக்கு, ஆயுள் காப்பீடு நிறுவனத்திற்கான பிரீமியத் தொகை தற்போதைய நிலையில் 3 மாதங்கள் வரையும், அஞ்சலக காப்பீடுகளுக்கான பிரீமியத் தொகை 2 மாதங்கள் வரையும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையால் இவை மேலும் காலதாமதமாகும்.
தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியில் (அரசு போக்குவரத்துக் கழகமானது வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றுள்ளதால் அந்த நிதியை போக்குவரத்துக் கழகமே நேரடியாக கையாண்டு வருகிறது) இருந்து கல்விக் கடன் உள்ளிட்ட 9 வகையான கடன்களை பெற முடியும்.
நிதிச் சிக்கலால் அந்த கடன்களை பெறுவதில் ஏற்கெனவே காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் கேட்கப்பட்ட கடன்கள் இந்த ஆண்டில்தான் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்போது டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமை மூலம் வருங்கால வைப்புநிதி கடன்களை பெறுவதில் மேலும் காலதாமதம் ஏற்படும். அது தொழிலாளர்களை வெகுவாகப் பாதிக்கும் என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.
உயர் வருவாய்ப் பிரிவு மக்கள் பயணிக்கும் விமானத்திற்கான எரிபொருளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆனால் ஏழை, எளிய மக்கள் பயணிக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு எவ்வித மானியமும் வழங்கப்படுவதில்லை. எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிக்கப்படும் டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.