நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புளியங்குடியில் அமைக்கப்படுமா பழங்கள் சேமிப்பு கிடங்கு வசதி?

கடையநல்லூர், மே 2: குற்றாலம் என்றால் அருவி, திருப்பதி என்றால் லட்டு. இந்த வரிசையில் எலுமிச்சை என்றால் உடன் நினைவிற்கு வருவது திருநெல்வேலி மாவட்டத்தின் புளியங்குடிதான். 'லெமன் சிட்டி' என்று இப் பகுதி ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:52 pm

வி.குமாரமுருகன்

கடையநல்லூர், மே 2: குற்றாலம் என்றால் அருவி, திருப்பதி என்றால் லட்டு. இந்த வரிசையில் எலுமிச்சை என்றால் உடன் நினைவிற்கு வருவது திருநெல்வேலி மாவட்டத்தின் புளியங்குடிதான். 'லெமன் சிட்டி' என்று இப் பகுதி மக்களால் அழைக்கப்படும்  புளியங்குடியில் அந்தளவிற்கு எலுமிச்சம் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  எத்தனையோ இடங்களில் எலுமிச்சம் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், புளியங்குடி எலுமிச்சைக்கு என்று தனி மவுசு உள்ளது.

அதற்குக் காரணம் இங்கு சாகுபடி செய்யப்படும் பழங்களில் சாறு அதிகம் என்பதுடன், பார்ப்பதற்கு திரட்சியாகவும் இருப்பதுதான்.  எலுமிச்சை சாகுபடி செய்யும் விவசாயிகள், பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், அந்த பழங்களை பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் இப்பகுதியைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்டோர்  எலுமிச்சையால் பயனடைந்து வருகின்றனர்.

  பொதுவாக மற்ற பொருட்கள் விற்கப்படும் சந்தையில் எலுமிச்சைக்கும் கடை இருக்கும். ஆனால் எலுமிச்சைக்கென்று தனி விற்பனைச் சந்தை புளியங்குடியில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடையநல்லூர், புளியங்குடி, புன்னையாபுரம், சொக்கம்பட்டி,  சங்கரன்கோவில், ராஜபாளையம், வாசுதேவநல்லூர்,குமந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இங்கு விற்பனைக்காக பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.

  புளியங்குடி வட்டாரத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 15,000 விவசாயிகள் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர்.  புளியங்குடி சந்தைக்கு தினமும் 150 டன் முதல் 200 டன் பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

பழங்களைப் பொறுத்தவரை முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரம் என வகைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கோடை காலத்தில் முதல்தர பழங்கள் ஆயிரத்திற்கு ரூ. 2,000 எனவும், இரண்டாம் தர பழங்கள் ரூ.1500 எனவும், மூன்றாம் தர பழங்கள் ரூ.1000த்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது முதல்தர பழங்களின் விலை ரூ. 3000 வரை உயரும்.

  எலுமிச்சம் பழத்தைப் பொறுத்தவரை மழை பெய்தால் திரட்சியாக உருவாகும். தற்பொழுது தேங்காய்களின் விலை வீழ்ச்சியால் ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடியிலிருந்து எலுமிச்சை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இது விவசாயிகளுக்கு பயனுள்ள சாகுபடியாக உள்ளது.

  புளியங்குடியில் சாகுபடியாகும் பழங்கள் கேரளம், கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்களுக்கும், அங்கிருந்து மாலத்தீவு மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விவசாயிகளிடமிருந்து எண்ணிக்கை அடிப்படையில் பழங்கள் பெறப்பட்டு எடைக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 சேமிப்பு கிடங்கு வசதி: பொதுவாக கோடை காலங்களில் பழங்களின் தேவை அதிகமாக இருக்கும் , மழைக்காலங்களில் சற்று குறைவான தேவை இருக்கும். இதனால் சாகுபடி செய்யப்படும் பழங்கள் வீணாகும் வாய்ப்பு உள்ளது. எனவே குளிர்சாதன வசதி கொண்ட சேமிப்பு கிடங்கை புளியங்குடியில் நிறுவினால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெரிதும் பயன் அளிக்கும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை.

 மேலும் புளியங்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சம் பழங்களைக் கொண்டு புதிய வகை பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலையை அரசு அமைத்தால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என்பதும் விவசாயிகளின் ஆலோசனை.

  எனவே, டன் கணக்கில் எலுமிச்சை விளையும் புளியங்குடியில் அது சார்ந்த தொழிற் கூடங்கள் இல்லாததால், ஏற்றுமதி மட்டுமே இங்கு நடைபெற்று வருகிறது.. இந்நிலை மாறி புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால், எலுமிச்சையை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்காகும் செலவினம் குறைக்கப்படுவதுடன், வட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்க முடியும். அரசு செயல்படுத்துமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.