குருத்துப்பூச்சி தாக்குதல்: 3 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் பாதிப்பு

திருநெல்வேலி, அக். 17: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் குருத்துப்பூச்சி நோய்த் தாக்குதலால் சேதமடைந்துள்ளது. இதனால், சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் செய்வ
Updated on
2 min read

திருநெல்வேலி, அக். 17: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் குருத்துப்பூச்சி நோய்த் தாக்குதலால் சேதமடைந்துள்ளது. இதனால், சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

 தென் மேற்குப் பருவ மழை காலமான கார் பருவத்தில் கடனா நதியின் வடிநிலப் பகுதியான அம்பாசமுத்திரம் வட்டம் ஆழ்வார்குறிச்சி தென்கால்வாய், மஞ்சம்புளி கால்வாய், பெருங்கால்வாய், அரசபத்து கால்வாய் ஆகியவற்றின் கீழ் உள்ள பாசனப் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களில் அம்பை-16, கோவை-65 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். இதில் ஆழ்வார்குறிச்சி தென்கால் பகுதியான செங்காநல்லூரில் சுமார் 100 ஏக்கர் நிலங்களில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஞ்சிய ஆழ்வார்குறிச்சி, பெத்தபிள்ளை குடியிருப்பு, அழகப்பபுரம், சம்பன்குளம், புதுக்குடியிருப்பு, சிவசைலம், பூவன்குறிச்சி, காசிநாதபுரம், கீழாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஒரு வார காலத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கும் நிலை இருந்தது.

 இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த குருத்துப்பூச்சி நோய்த் தாக்குதல் தற்போது அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி நெல்லில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கொத்துக்கொத்தான நெல் மணிகளுடன் பொன்னிறமாய் காட்சி அளிக்க வேண்டிய வயல்வெளிகள் வெள்ளைவெளேரென வெள்ளைச்சாவிக் காடாய் காட்சி அளிப்பதைப் பார்த்து விவசாயிகள் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கின்றனர்.

 நோய்த் தாக்குதல் இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒன்றரை மேனி, அதாவது ஒரு ஏக்கருக்கு 18 கோட்டை (36 மூட்டைகள்) நெல் மகசூல் கிடைத்திருக்கும். இப்போது எதுவும் இல்லாமல் வெறுங்கையாய் நிற்கிறோம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

 ஒரு ஏக்கரில் நெல் பயிரிட சுமார்  ரூ.  3,500 முதல்  ரூ.  5 ஆயிரம் வரை செலவாகிறது. ஒன்றரை மேனி நெல் கிடைத்தால் கூட ஏக்கருக்கு  ரூ.  27 ஆயிரம் கிடைத்திருக்கும். இப்போது குருத்துப்பூச்சி நோய்த் தாக்குதலால் விவசாயிகள் செலவு செய்த பணத்தையும் இழந்து, மகசூலையும் இழந்து நிற்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு ஏக்கருக்கு குறைந்தபட்சம்  ரூ.  10 ஆயிரமாவது இழப்பீடு தர வேண்டும் என்றார் கடனா நதி நீர்ப்பாசன நீர்ப்பகிர்மான குழுத் தலைவர் ஆர். கசமுத்து. இவருக்கு ஒன்றரை ஏக்கர் நெல் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.

 கடனா நதியில் இந்த ஆண்டு குறைவான அளவு தண்ணீர் இருந்ததால் வழக்கமானபடி ஜூன் முதல் தேதி பாசனத்துக்காக அணை திறக்கப்படவில்லை.  இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழையும் காலத்தே பெய்யாததால் அணையில் நீர்மட்டமும் உயரவில்லை. எனவே, ஒரு மாதம் கழித்துதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்பு விவசாயிகள் நாற்றுப்பாவி நடவு செய்தனர். கிணற்றுப் பாசன வசதி உள்ள விவசாயிகளும், வெளியூர்களில் இருந்து நாற்றை வாங்கி வந்தவர்களும், முதல் அணைப் பகுதியைச் சேர்ந்த செங்காநல்லூர் விவசாயிகளும் முதலில் நடவு செய்தனர். அவர்கள் இப்போது அறுவடையை தொடங்கியுள்ளனர். அந்த பயிர்களில் நோய்த் தாக்குதல் இல்லை. நாற்றுப்பாவி நட்ட விவசாயிகளுக்கு நடவு காலதாமதம் ஆனதால் செப்டம்பர் இறுதியிலும், அக்டோபர் முதல் வாரத்திலும் பெய்த எதிர்பாராத மழையில் பயிர்கள் சிக்கி நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கசமுத்து தெரிவித்தார்.

பயிர் காப்பீடு இல்லை: இயற்கை இடர்ப்பாடு மற்றும் நோய்த் தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்தாலோ, மகசூல் குறைந்தாலோ விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் காப்பீட்டு திட்டத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆழ்வார்குறிச்சியில் குருத்துப்பூச்சி நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளில் 100-க்கும் குறைவானவர்களே பயிர் காப்பீடு செய்துள்ளனர். அவர்கள் வங்கிகளில் பயிர்க் கடன் பெற்றுள்ளதால் அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. எஞ்சியுள்ளவர்கள் எவரும் காப்பீட்டு திட்டத்தில் சேராததால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

 கார் பருவம் முடிவடைந்து அடுத்து பிசானப் பருவம் தொடங்க உள்ளது. கார் பருவ சாகுபடி கைகூடாததால் அடுத்து பிசானப் பருவத்துக்கு செலவு செய்ய என்ன செய்வது என பல விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதற்காக அரசின் உதவியை  கோரவும், ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் போராட்டங்களை நடத்த தயாராகி வருகின்றனர் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com