திருநெல்வேலி, அக். 25: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 201 விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.6.54 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை.
வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் எவரும் முன்வருவதில்லை என குறை கூறப்பட்டு வரும் சூழ்நிலையில், காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் அவர்களை விரக்தியடையச் செய்துள்ளது.
புயல், வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, பூச்சி, நோய்த் தாக்குதல், இயற்கைத் தீ, மின்னல் போன்றவற்றால் பயிருக்கு சேதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல், விவசாயத்தில் முற்போக்கான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் வழிமுறைகள் மற்றும் அதிக விலையுள்ள இடுபொருள்கள் பயன்படுத்த ஊக்கமளித்தல், விவசாய வருமானத்தை உறுதிப்படுத்துதல், உணவு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குதல் மற்றும் ஊக்கமளித்தல் ஆகியன தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தின் குறிக்கோள்.
நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சைப் பயறு, துவரை, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, வாழை ஆகிய பயிர்களுக்கு இந்த காப்பீடு அளிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், சூரியகாந்தி, வாழை, பருத்தி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பயிர்களுக்கு இந்தக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
பயிர் காப்பீடுக்கான மொத்த பிரீமிய தொகையில் 50 சதவீதத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் எஞ்சிய 50 சதவீத தொகையை தமிழக அரசு செலுத்தும். இதேபோல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை அகில இந்திய வேளாண்மை காப்பீடு நிறுவனம் அளிக்கும். எஞ்சிய 50 சதவீத தொகையை தமிழக அரசு அளிக்கும்.
2009-10ஆம் ஆண்டில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம் வட்டாரங்களில் உள்ள பண்பொழி, இலத்தூர், தென்காசி, கல்லூரணி ஆகிய குறுவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கார் பருவ நெல் பயிரை காப்பீடு செய்திருந்தனர். அந்த ஆண்டில் மேற்கூறிய குறுவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சராசரி மகசூலைவிட குறைவான மகசூல் கிடைத்த 201 விவசாயிகள் தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு பெற தகுதி பெற்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு நிதி ரூ.6.54 லட்சத்தை அகில இந்திய வேளாண்மை காப்பீடு நிறுவனம் அண்மையில் வழங்கியுள்ளது. அந்தத் தொகையானது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு வழங்க வேண்டிய அதே அளவு தொகையான ரூ.6.54 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை.
ஒரு பருவத்தில் பயிரில் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை, அடுத்த பருவம் தொடங்கும் முன்பு கிடைத்தால்தான் அது உண்மையான பயனை அளிக்கும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வேளாண்மை செய்யும் விவசாயிக்கு இழப்பீடு கிடைக்க காலதாமதமானால் அடுத்த பருவத்துக்கு அவர் மேலும் கடன் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும்.
"2009-10ஆம் ஆண்டு கார் பருவத்துக்கான காப்பீட்டுத் தொகையானது, கடந்த ஆண்டின் பிசானப் பருவம் முடிந்து, இந்த ஆண்டின் கார் பருவமும் முடிவடைந்து பிசானப் பருவம் தொடங்கவுள்ள நிலையில் சுமார் 10 மாதங்கள் ஆகியும் மாநில அரசால் அளிக்கப்படவில்லை. இப்படி இருந்தால் விவசாயிகள் எப்படி ஆர்வமுடன் காப்பீட்டுத் திட்டத்தில் சேர முன்வருவார்கள்' என விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கார் பருவம் என்பது ஜூனில் தொடங்கி அக்டோபர்-நவம்பரில் முடிவடையும். வேளாண்மைத் துறையினரும், புள்ளியியல் துறையினரும் பயிர் மகசூல் ஆய்வு முடித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப டிசம்பர் இறுதிவரை ஆகிவிடும். அதன் பின்புதான் அறிக்கை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குள்ளாக அக்டோபர் இறுதி அல்லது நவம்பரில் பிசானப் பருவம் தொடங்கிவிடும் ஆதலால் கார் பருவத்துக்கான இழப்பீட்டை பிசானப் பருவத்துக்குள்ளாக வழங்க இயலாது என்பது வேளாண் துறையினரின் கருத்து.
ஆனால், கடந்த ஆண்டு கார் பருவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆண்டின் கார் பருவம் முடிவடையும் நிலையில்தான் மத்திய அரசின் பங்குத்தொகை கிடைத்துள்ளது. எனவே, குறைந்தபட்சம், மத்திய அரசின் பங்குத்தொகை வழங்கப்படும்போது, மாநில அரசின் பங்குத்தொகையையும் சேர்த்து வழங்கினாலாவது பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.
இந்நிலையில், கடந்த ஆண்டில் பிசானப் பருவத்தில் பாதிக்கப்பட்ட 5,508 விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கார் பருவ விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையே தமிழக அரசால் இன்னும் வழங்கப்படாத நிலையில் பிசானத்திற்கான இழப்பீட்டுத் தொகை எப்போது வழங்கப்படுமோ என ஏக்கமுடன் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

