புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பராமரிப்பின்றி பாழாகும் வட்டக்கோட்டை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரி, செப். 25: போதிய பரமாமரிப்பு எதுவும் செய்யப்படாததால், வரலாற்று சிறப்பு மிக்க வட்டக்கோட்டையை சுற்றுலாப் பயணிகள் புறக்கணிக்கும் அவலம் தொடர்கிறது.   சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:06 pm

தி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி, செப். 25: போதிய பரமாமரிப்பு எதுவும் செய்யப்படாததால், வரலாற்று சிறப்பு மிக்க வட்டக்கோட்டையை சுற்றுலாப் பயணிகள் புறக்கணிக்கும் அவலம் தொடர்கிறது.

  சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வட்டக்கோட்டை.

வட்டமான வடிவத்தில் கருங்கற்களால் மிகுந்த கலை அம்சத்துடன் கட்டப்பட்டுள்ளதால் வட்டக்கோட்டை என்னும் பெயர் பெற்று விளங்குகிறது.

  திருவாங்கூரின் வேணாட்டு அரசர்களால் கி.பி 18-ம் நூற்றாண்டில் இக் கோட்டை சீரமைக்கப்பட்டது. முதலில் செங்கற்கோட்டையான இது டச்சு தளபதி டிலனாயால் கற்கோட்டையாக வலிமைப்படுத்தப்பட்டது. 1809-ல் ஆங்கிலேயப் படைகள் திருவாங்கூர் அரசை அழித்தபோது வட்டக்கோட்டையை சிதைக்காமல் விட்டு விட்டது.

  நான்குபுறமும் உள்ள உள் கோட்டை அமைப்பு, தூண்கள் கொண்ட மண்டபத்துடனும், சமமான கூரை அமைப்புடனும் அமைந்துள்ளது. உள் கொத்தளம் உறுதியான கருங்கற்களால் ஆன படிக்கற்களை கொண்டதாக அமைந்துள்ளது. ராணுவ படையினர் பீரங்கிகளை கொண்டு செல்ல வசதியாக சாய்தளம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

 வெளிக்கோட்டைச் சுவர் நன்கு செதுக்கப்பட்ட கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. முக்கிய நுழைவாயில் அழகான வளைவுடனும், அதன் மேல் திருவாங்கூர் அரசர்களின் அரச சின்னத்துடன் அமைந்துள்ளது. கோட்டையின் நடுவில் அமைந்துள்ள நீர்நிலை இங்கு தங்கியிருந்த ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர நீர் ஆதாரமாக விளங்கியது.

  இக் கோட்டையில் ஆயுத அறை, கண்காணிப்பு அறை, ஓய்வு அறை, சுரங்கப் பாதை ஆகியன இருந்தன. இதற்கு ஆதாரமாக சேதமடைந்த பீரங்கி ஒன்று தற்போது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

  மண்டப விதானத்தில் செதுக்கப்பட்டுள்ள மீன் சின்னம் பாண்டியர்களுக்கும் கி.பி 12-ம் நூற்றாண்டில் முத்து கலாபத்தை காப்பதற்கு ஏற்ற ராணுவ தளமாக இருந்ததைக் காட்டுகிறது. எனவே, பாண்டியர்கள் ஒரு காலத்தில் இக் கோட்டையை வசப்படுத்தியிருந்தார்கள் எனவும் நம்பப்படுகிறது. தவிர, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் கருதப்பட்டு வருகிறது.

  தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புகள் வாய்ந்த வட்டக்கோட்டையை தமிழகஅரசின் சுற்றுலாத் துறை கண்டு கொள்ளாமல் இருப்பது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வேதனைக்குள்ளாக்குகிறது. கோட்டையின் பின்புறம் அழகான மணல்களைக் கொண்ட கடற்கரைப் பகுதியாகும். இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முறையான பாதை வசதி இதுவரை செய்யப்படவில்லை.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக இங்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதியும் செய்யப்படாததால் அடிக்கடி அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. இக் கோட்டை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் எதுவும் இல்லை. குடிநீர், கழிப்பறை வசதிகள் அறவே செய்யப்படவில்லை.

  கோட்டையின் வெளிப்பகுதியில் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் கட்டப்பட்டுள்ள உணவகம், கழிப்பறைகள் பல ஆண்டுகளாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. சிறுவர் பூங்கா பராமரிப்பு இன்றி அழிவின் பிடியில் உள்ளது.

  இது குறித்து கேரளத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தீபன் கூறியதாவது:

வட்டக்கோட்டையைப் பார்க்கும் ஆவலில் குடும்பத்தினருடன் சுற்றுலா வந்தேன். பல்வேறு வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கிய இக்கோட்டை போதிய பராமரிப்பின்றி உள்ளது.

  சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது. இதனால், பகல் நேரத்தில் வரக்கூட அச்சமான நிலை உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.   கோட்டையை சிறந்தமுறையில் பராமரித்து, வெளிப் பகுதியில் நவீன வசதியுடன் கூடிய தங்கும் விடுதிகள், கழிப்பறைகள், விளையாட்டு பூங்கா, கடற்கரைக்கு எளிதான பாதை வசதி, புறக்காவல் நிலையம், பஸ் வசதி ஆகியவை செய்யும்பட்சத்தில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்றார் அவர்.

  இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் விருப்பமாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.