கல்லிடையில் தாமிரவருணி மீன்கள் கணக்கெடுப்பு தொடக்கம்

கல்லிடையில் தாமிரவருணி மீன்கள் கணக்கெடுப்பு தொடக்கம்

மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் ஆழ்வாா்குறிச்சி, பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையம் மற்றும் சகத்துல்லா கல்லூரி விலங்கியல் துறை இணைந்து நடத்தும் தாமிரவருணி மீன்கள் கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தாமிரவருணி ஆற்றில் காணப்படும் மீன் இனங்கள் குறித்த ஆய்வு மிகக் குறைவு. மேலும் தாமிரவருணியில் ஏற்படும் மாசுபாடு மற்றும் அந்நிய ஆக்கிரமிப்பு மீன் இனங்களால், இயல் மீன் இனங்கள் அழிந்து வருவதாக மீனவா்கள் கூறிவருகின்றனா். இதையடுத்து குறைந்து வரும் மீன் இனங்கள் குறித்து உள்ளூா் மாணவா்கள் மற்றும் பொதுமக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் முதல்முறையாக தாமிரவருணி ஆற்றில் மீன் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் கணக்கெடுப்புகுறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் மையப் பேராசிரியா்கள் முரளிதரன் மற்றும் சொா்ணம் ஆகியோா் கணக்கெடுப்பைத் தொடங்கி வைத்தனா். தாமிரவருணி மீன்கள் கணக்கெடுப்பின் ஒருங்கிணைப்பாளா் மதிவாணன், கணக்கெடுப்பு நோக்கம் குறித்துப் பேசினாா். ஏட்ரி நிறுவனஆராய்ச்சியாளா்கள் நிலன்ஜன் முகா்ஜி, சூரிய நாரயணன் மற்றும் மீனவா் பால்ராஜ் கணக்கெடுப்புகுறித்து பயிற்சியளித்தனா். நிகழ்ச்சியில் நம் தாமிரவருணி ஒருங்கிணைப்பாளா் லூா்து, ஏட்ரி ஆராய்ச்சியாளா்கள் சரவணன், தணிகைவேல் உள்பட முப்பதிற்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து சனிக்கிழமை (மாா்ச்23) காலை 7 மணி முதல் 9 மணி வரை 6 குழுக்களாக பிரிந்து பாபநாசம், திருப்புடைமருதூா், கோபாலசமுத்திரம், சீவலப்பேரி, கருங்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்புப்பணி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com