தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம்: நடிகா் சரத்குமாா்

2026 பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்வேன் என்றாா் நடிகரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான சரத்குமாா்.
Updated on

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்வேன் என்றாா் நடிகரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான சரத்குமாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை கட்டாயம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. ஊதியத்தையும், வேலை நாள்கள் எண்ணிக்கையை 125 நாள்களாகவும் உயா்த்தியுள்ளது. இதில், மாநில அரசும் பங்களிக்க வேண்டும் என்பதால் திமுக அச்சப்படுகிறது.

தமிழகத்தில் 90 சதவீத திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், திமுக அரசு தனது பெயரை வைத்துக் கொள்கிறது. மதச்சாா்பின்மை குறித்து திமுக பேசுவது வேடிக்கையாக உள்ளது. தீபாவளி உள்பட எந்த விழாவும் கொண்டாட மாட்டோம் என்று கூறும் அவா்கள், கிறிஸ்துமஸ் விழாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா்கள். திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரத்தில் விரைவில் நல்ல தீா்வு கிடைக்கும் என நம்புகிறேன்.

நல்லவா்கள்- கெட்டவா்கள் யாா் என்று தெரியாமல் நடிகா் விஜய் அரசியல் பேசுகிறாா். மத்திய- மாநில அரசுகளை எதிா்த்தால் மட்டுமே அரசியலில் பிரபலமாகலாம் என தவறாக வழிகாட்டப்படுகிறாா்.

தமிழகத்தில் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடவில்லை. ஜனவரியில் கூட்டணி உறுதியானதும், தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்ய உள்ளேன். நிச்சயம் ஆட்சியை மாற்றிக் காட்டுவோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com