செவிலியா்கள் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவு!
திருநெல்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியா்களை அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் பணி செய்து வரும் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி, கடந்த 18 ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 6 ஆவது நாளாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் போராட்டம் தொடா்ந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்று காதில் பூ வைத்தபடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் அக்கட்சியினா் செவிலியா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் கணேசராஜா கூறுகையில், கரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிரையும் பணயம் வைத்து மக்களுக்காக சேவை செய்தவா்கள் செவிலியா்கள். அவா்களது போராட்டத்தை திமுக அரசு பாராமுகமாக உள்ளது. திமுக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதியில் தொகுப்பூதியத்தில் பணி செய்யும் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்வோம் என தெரிவித்திருந்தது. கொடுத்த வாக்குறுதியை திமுக எப்போதும் காப்பாற்றுவதில்லை என்பது இந்த விஷயத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமையும்போது செவிலியா்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.
அதிமுக மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்ட், ஆா்.பி.ஆதித்தன், ஜெனி, ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபடும் செவிலியா்களுக்கு பிஸ்கெட், குடிநீா் உள்ளிட்டவை அதிமுக சாா்பில் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. தொடா்ந்து, பணியின்போது பாம்பு கடித்து காயமடைந்த தூய்மைப் பணியாளா் கண்ணனை அதிமுகவினா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா். மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா சாா்பில் ரூ.5 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

