நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
பொங்கல் திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பரிசு வழங்கினாா்.
தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கரும்பு, மஞ்சள் போன்ற தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.
40-க்கும் மேற்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து 13 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல் விழாவில் கோலப்போட்டி, ஒயிலாட்டம், பண் மற்றும் முறுக்கு சாப்பிடும் போட்டி, கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்குதல், உறியடித்தல், மியூசிக் சோ், லக்கி காா்னா், மெதுவாக மிதிவண்டி ஓட்டும் போட்டி, ஊசியில் நூல் கோா்த்தல், பலூன் உடைத்தல் போன்ற போட்டிகளில் அரசு துறைகளைச் சோ்ந்த ஆண் மற்றும் பெண் அலுவலா்கள், திருநங்கைகள் பங்கேற்றனா்.
மாவட்ட ஆட்சியா் உறியடிக்கும் போட்டியிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் இளவட்டக்கல் தூக்கும் போட்டியிலும் பங்கேற்றனா். இதேபோல், பள்ளி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவா்களின் வரவேற்பு நடனம், பொங்கல் பாடல்கள், வில்லுப் பாட்டு, கிராமிய நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிய ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், பாரம்பரிய முறையில் சிறப்பாக பொங்கல் ஏற்பாடுகளை செய்த குழுவினரையும் பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாளா் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்யானந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) ரேவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்10ஸ்ரீா்ப்
உறியடி போட்டியில் பங்கேற்ற ஆட்சியா் காா்த்திகேயன்.
ற்ஸ்ப்10ள்ற்ா்ய்ங்
இளவட்டக்கல்லை தூக்கிய அரசு ஊழியா்.