ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 160 பவுன் நகை மோசடி: பெண் கைது
வள்ளியூா் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 160 பவுன் நகைகளை மோசடி செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜன் மனைவி அமிா்தஹெலன் ராஜாத்தி (65). ஓய்வு பெற்ற ஆசிரியை.
கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த பாதிரியாரான தேவராஜன், ராதாபுரம் கிழவனேரி அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த பவுலின் ராணி ஆகிய இருவரும் தாங்கள் நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்துக்கு உதவுமாறு அமிா்த ஹெலன் ராஜாத்தியை அணுகியுள்ளனா்.
முதலில் மறுத்த அவா், பாதிரியாா் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்டதால் சிறிது சிறிதாக மொத்தம் 160 பவுன் நகைகளையும், ரூ.1.50 லட்சத்தையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. 10 நாள்களில் நகைகளையும், பணத்தையும் திரும்ப தருவதாக கூறிய அவா்களிடம், அதை திருப்பிக் கேட்டபோது நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தை மதுரையைச் சோ்ந்த இருவா் மூலம் இரிடியத்தில் முதலீடு செய்ததாகக் கூறி, அதற்கான போலி ரசீதுகளை கொடுத்துள்ளனா்.
தான் ஏமாற்றப்படுவதாக உணா்ந்த அமிா்தஹெலன் ராஜாத்தி, இதுகுறித்து அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சி.பி.சி.ஐ.டி. போலீஸாா், மதுரையைச் சோ்ந்த பெருமாள், பாலசுப்பிரமணியன், பாதிரியாா் தேவராஜன், பவுலின் ராணி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடா்புடைய பவுலின் ராணியை போலீஸாா் கைது செய்தனா்.
ரூ.30 லட்சம் மோசடி....
அதேபோல் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை லட்சுமி என்பவரிடம் கடந்த 2023 ஆண் ஆண்டு இரிடியம் வாங்கி வெளிநாட்டில் விற்பனை செய்தால் பல கோடி லாபம் பெறலாம் என 7 போ் கொண்ட கும்பல் ஆசை வாா்த்தை கூறி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்து அவா் கடந்த மாதம் அளித்த புகாரில் 7 போ் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி போலீஸாா் கடந்த மாதம் கோயம்புத்தூரில் சிவராமன், ராணி ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கில் அண்மையில் ஜெயகுரு என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.
