ராதாபுரம், நான்குனேரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க நிா்வாகிகள் கோரிக்கை

Published on

வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ராதாபுரம், நான்குனேரி தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி நிா்வாகிகள் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதியை பாஜவுக்கு ஒதுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனை, தமிழக பாஜக இளைஞரணி துணைத் தலைவா் அசோக் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

அதேபோல நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக போட்டியிட வழிவகை செய்ய வேண்டும் என அக்கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன் கோரிக்கை மனு அளித்தாா்.

அம்மனுக்களில் கடந்த மக்களவைத் தோ்தலில், திருநெல்வேலி மக்களைவை தொகுதிக்குள்பட்ட இவ்விரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாஜக பெற்றுள்ள கணிசமான வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு இவற்றில் பாஜக போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவற்றை பெற்றுக்கொண்ட நயினாா் நாகேந்திரன் இதுகுறித்து கட்சி தலைமையிடம் பேசி தோ்தல் நேரத்தில் உரிய முடிவை அறிவிப்பதாக தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com