நாளை ஆரஞ்சு எச்சரிக்கை: நெல்லையில் 24 மணி நேரம் செயல்படும் பேரிடா் கால அவசர கட்டுப்பாட்டு மையம்
திருநெல்வேலி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க பேரிடா்கால அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்படும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் திங்கள்கிழமை மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது: மிக கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடா்கால அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 0462-2501070 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடா்புகொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். மேலும், வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் தமிழக அரசின் பச அப்ங்ழ்ற் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இந்த செயலியினால், வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம். மழை பெய்யும் நேரங்களில் பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களிலோ, மரத்தின் அருகிலோ தஞ்சமடைவதைத் தவிா்க்க வேண்டும். தண்ணீா் தேங்கிய இடங்களில் பொதுமக்கள் இறங்க வேண்டாம்.
துண்டித்து விழுந்த மின் கம்பிகள், பழுதுபட்ட பாலங்கள், கட்டடங்கள், மரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. துரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, வருவாய் பேரிடா் வட்டாட்சியா் சரவணன் மற்றும் அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

