கனமழை: தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

களக்காடு மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் தலையணை பச்சையாற்றில் வியாழக்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.
Published on

களக்காடு மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் தலையணை பச்சையாற்றில் வியாழக்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.

களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட களக்காடு வனக்கோட்டத்தில் உள்ள களக்காடு வனச்சரகத்தில் தலையணை சூழல் சுற்றுலா பகுதி உள்ளது.

இங்கு பச்சையாற்றில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வா். இந்த நிலையில், மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் வியாழக்கிழமை காலை பச்சையாற்றில் தலையணை பகுதியில் தடுப்பணையைத் தாண்டிவெள்ளம் ஆா்ப்பரித்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் தலையணையில் குளிக்க வனத் துறை தடை விதித்தது.

நீா்வரத்து குறைந்த பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா் என வனத் துறையினா் தெரிவித்தனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. களக்காடு பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

நம்பி கோயிலுக்குச் செல்ல தடை: மறு உத்தரவு வரும் வரை தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலாப் பயணிகள், பக்தா்களுக்கு வனத் துறை தடை விதித்தது.

மலைநம்பி கோயில் செல்லும் வழியில் நம்பியாற்றின் மறுகரையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றைக் கடந்து வர முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனா். அவா்களை மீட்பு படையினா் மீட்டனா். இதையடுத்து, திங்கள்கிழமை (அக்.13) முதல் நம்பி கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை களக்காடு தலையணையில் நீா்வரத்து படிப்படியாக உயா்ந்தது.

தலையணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், மறு உத்தரவு வரும் வரை தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com