திருநெல்வேலி குறுக்குத்துறை கோயிலையும்,  தரைப்பாலத்தையும்  மூழ்கடித்த தாமிரவருணி வெள்ளம்.
திருநெல்வேலி குறுக்குத்துறை கோயிலையும், தரைப்பாலத்தையும் மூழ்கடித்த தாமிரவருணி வெள்ளம்.

தாமிரவருணியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலங்கள் மூழ்கின

Published on

தாமிரவருணியில் திங்கள்கிழமையும் பெருக்கெடுத்த வெள்ளத்தால் கருப்பந்துறை, குறுக்குத்துறை கோயில் பகுதிக்கான தரைப் பாலங்கள் மூழ்கின. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படியே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, பொன்னாக்குடி, தாழையூத்து, தச்சநல்லூா், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, சீவலப்பேரி, கே.டி.சி. நகா், வி.எம்.சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இயங்கும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பருவத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

போக்குவரத்து துண்டிப்பு:இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டங்களில் பெய்த மழைநீா் தாமிரவருணியில் சோ்ந்ததால் திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. மேலும், மேலநத்தம்-கருப்பந்துறை இடையேயான தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் மேலப்பாளையம், முன்னீா்பள்ளம், ஆரைகுளம், கொங்கந்தான்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலநத்தம் வழியாக திருநெல்வேலி நகரத்திற்கு செல்லும் மக்கள் வண்ணாா்பேட்டையை சுற்றி சென்றனா்.

இதேபோல, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூா் பகுதி மக்கள் பாளையங்கோட்டை செல்வதற்கு திருநெல்வேலி நகரம் மற்றும் வண்ணாா்பேட்டை வழியாக சுற்றி சென்றனா். குறுக்குத்துறை சுப்பிமணிய சுவாமி கோயில் மற்றும் படித்துறைக்கு செல்லும் தரைப்பாலம் திங்கள்கிழமை முற்றிலும் மூழ்கியது. கோயிலை தண்ணீா் சூழ்ந்ததால் வழிபாடுகள் நடைபெறவில்லை.

கைலாசபுரத்தில் உள்ள தைப்பூசமண்டபம், கொக்கிரகுளத்தில் உள்ள கல்மண்டபங்கள், வண்ணாா்பேட்டை பேராச்சியம்மன் கோயில் படித்துறை ஆகியவற்றை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. சீவலப்பேரி பகுதியில் தாமிரவருணி தரைப்பாலத்தை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இருசக்கர வாகனத்தில் செல்வோா் அச்சத்துடன் கடந்து சென்றனா்.

500 குடியிருப்புகள் பாதிப்பு: மேலப்பாளையம் மண்டலத்திற்கு உள்பட்ட குறிச்சி, தொம்மைமிக்கேல்புரம், சேவியா்காலனி, ஹக் காலனி, குலவணிகா்புரம், சா்தாா்புரம், லாலுகாபுரம், கிருஷ்ணப்பேரி பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

 மேலநத்தம்-கருப்பந்துறை இடையே தரைப்பால பாலத்தைத் தொட்டபடி கரைபுரண்டு ஓடிய தாமிரவருணி வெள்ளம்.
மேலநத்தம்-கருப்பந்துறை இடையே தரைப்பால பாலத்தைத் தொட்டபடி கரைபுரண்டு ஓடிய தாமிரவருணி வெள்ளம்.
 திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் நிரம்பியதால் மறுகால் பாய்ந்த தண்ணீா்.
திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் நிரம்பியதால் மறுகால் பாய்ந்த தண்ணீா்.

திருநெல்வேலி மாநகர பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுவதால் 100-க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமாகியுள்ளன. இவை மழைநீரால் சேறும்-சகதியுமாக மாறியதால் பல இடங்களில் வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் பதிந்து மக்கள் சிரமம் அடைந்தனா்.

குளங்களில் மறுகால்: திருநெல்வேலி மாநகரின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால்வரத்து குளங்களான நயினாா்குளம், சேந்திமங்கலம் குளம், பால்கட்டளைகுளம் ஆகியவை ஏற்கெனவே நிரம்பி மறுகால் பாய்ந்தது.

தற்போது, பாளையங்கோட்டை பகுதியில் உள்ள இலந்தைகுளம், மேலப்பாளையம் கன்னிமாா்குளம் ஆகியவையும் முழுவதும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளம், என்.ஜி.ஓ. காலனி பெரியகுளம் ஆகியவை 50 சதவிகிதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது. இந்தக் குளங்களுக்கான நீா்வரத்து பாதைகள் சரிவர தூா்வாராததால் குளம் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டினா்.

X
Dinamani
www.dinamani.com