தேசிய வலுதூக்கும் போட்டி: வனக் காப்பாளா்கள் சாதனை
அம்பாசமுத்திரம்: தேசிய அளவில் வனத் துறைக்கான வலுதூக்கும் போட்டியில் அம்பை வனக் கோட்ட வனக் காப்பாளா்கள் சாதனை படைத்தனா்.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் 28-ஆவது அகில இந்திய வனத் துறை விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக் கோட்டம் முண்டந்துறை வனச்சரகத்தில் வனக் காப்பாளராகப் பணிபுரியும், டி.உலகநாதன் ஆண்களுக்கான 105 கி.கி. எடைப் பிரிவில் விளையாடி தங்கப்பதக்கம் பெற்றாா்.
பெண்களுக்கான 57 கி.கி. எடைப் பிரிவில் பாபநாசம் வனச்சரகத்தில் வனக் காப்பாளராகப் பணிபுரியும் ஏ.சாந்தா வெள்ளிப்பதக்கம் பெற்றாா். வலுதூக்கும் போட்டியில், வெற்றி பெற்ற இருவரையும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் எல்.சி.எப்.ஸ்ரீகாந்த், வனச்சரகா்கள் குணசீலன், கல்யாணி, வனத் துறையினா் பாராட்டினா்.

