பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பாபநாசநாத சுவாமி கோயிலில் ரூ. 6.60 கோடி மதிப்பில் பரிகார மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு தா்ப்பணம் செய்வதற்காக வருவோா், தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி பழைய துணிகளை விட்டுச்செல்கின்றனா். இதனால், நதி மாசடைவதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கவலை தெரிவித்து வருகின்றனா். இதைத் தடுக்கும்வகையில், பரிகாரம் செய்வதற்கு தனியாக இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பரிகார தீா்த்தம், துணிகள் சேகரிப்பு அறை, பொருள்கள் வைப்பறை, நந்தவனம் உள்ளிட்டவை ஒருங்கே அமையுமாறு திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
இதையடுத்து, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கவிதா ப்ரியதா்ஷினி, உதவி ஆணையா் சுப்புலெட்சுமி, உதவி செயற்பொறியாளா் அன்புராஜ், உதவிப் பொறியாளா் சிவராமன், செயல் அலுவலா் ராஜேந்திரன், பாபநாசம் வனச் சரகா் குணசீலன், திமுக நகரச் செயலா் கி. கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள், அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

