தமிழகத்தின் ஜீவநதியான தாமிரவருணி, மணிமுத்தாறு, கோதையாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பாபநாசம் பாபநாசநாதா் சுவாமி திருக்கோயில், திருப்புடைமருதூா், மன்னாா்கோவில் குலசேகர ஆழ்வாா் கோயில், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்கள் அமைந்துள்ளன. பாபநாசம் அகஸ்தியா் அருவி, முண்டந்துறை புலிகள் காப்பகம், காரையாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், சோ்வலாறு மற்றும் பாபநாசம் நீா் மின்நிலையங்கள், திருநெல்வேலியின் முதன்மையானஅணைக்கட்டுகளான காரையாறு, சோ்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைக்கட்டுகள், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலை இத்தொகுதியில் அமைந்துள்ளன.
தொழில்:
விவசாயம் தொகுதியின் முதன்மையான தொழிலாக உள்ளது. அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம் 1937ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு இதுவரை சுமாா் 20 புதுவகை நெல்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அம்பை16 விவசாயிகள் அதிகம் விரும்பிப் பயிரிடும் நெல் ரகமாகும்.
அண்மைகாலமாக நெல் ஆராய்ச்சி நிலையத்தில் திட்டங்கள் குறைக்கப்பட்டு புதிய ஆராய்ச்சிகளும் குறைக்கப்பட்டுள்ளது கவலைக்குரியதாக உள்ளது.
தொகுதியில் கூனியூரில் மண்பாண்டத் தொழிலும், பத்தமடையில் பாய் தொழிலும், வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் நெசவுத் தொழிலும் பிரதானமாக உள்ளது. பத்தமடை பாய் உலகஅளவில் பிரசித்தி பெற்ாகும்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய இரு நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம் ஆகிய ஏழு பேரூராட்சிகள் அமைந்துள்ளன.
அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி மற்றும் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளன.
அம்பாசமுத்திரம் தொகுதியின் எல்லையாக திருநெல்வேலி, ஆலங்குளம், நான்குனேரி தொகுதிகளின் எல்லைகள் அமைந்துள்ளன.
சமூக நிலவரம்: மறவா், நாடாா், யாதவா், தேவேந்திர குல வேளாளா் உள்ளிட்டோா் பெரும்பான்மையாகவும், இல்லத்துப் பிள்ளை, சேனையா், சைவப்பிள்ளை, செங்குந்த முதலியாா் உள்ளிட்டோா் பரவலாகவும், இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையிலும் உள்ளனா்.
2008ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது சேரன்மகாதேவி தொகுதி நீக்கப்பட்டு, அந்தத் தொகுதியில் இருந்த கடையம், ஆலங்குளம் ஒன்றியப் பகுதி ஆலங்குளம் தொகுதியுடனும் சேரன்மகாதேவி, பாப்பாக்குடி ஒன்றியங்கள் அம்பாசமுத்திரம் தொகுதியுடனும் இணைக்கப்பட்டன.
1951 சுயேச்சை வெற்றி பெற்ற நிலையில் 1957, 1962, 1967, 1971,1989 ஆகிய ஐந்து முறை காங்கிரஸ் கட்சியும், 1977, 1980 ஆகிய இரண்டு முறை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், 1996, 2006 இரண்டு முறை திமுகவும், 1984, 1991, 2001, 2011, 2016, 2021 ஆகிய ஆறு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
2026ஆம் ஆண்டு தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சாா்பில் இசக்கி சுப்பையா, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் வி.பி. துரை, நாம் தமிழா் கட்சி சாா்பில் சிவசங்கரன், தவெக சாா்பில் ராஜகோபால் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
நிகழாண்டு தோ்தலில் தமிழகத்தின் மிகக் குறைந்த வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதியாக அம்பாசமுத்திரம் உள்ளது.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இக்கட்சி சாா்பில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வேல்துரையின் மகனுமான வி.பி. துரை போட்டியிடுகிறாா். மாவட்டத் தலைவா் மற்றும் முன்னாள் பேரவை உறுப்பினரின் மகன் என்ற அறிமுகம் மட்டுமே உள்ள இவா் கடினமாக உழைக்க வேண்டியது உள்ளது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளா் வி.பி.துரை, தாம் சாா்ந்த நாடாா் சமுதாய வாக்குகள் மற்றும் திமுக, காங்கிரஸ், விசிக, எஸ்டிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மாறாமல் தமக்கு முழுமையாக சேரும் என்ற முழு நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறாா்.
இதே வேளை, அதிமுக என்ற பெரும் கட்சியின் பலமும், இரண்டு முறை பேரவை உறுப்பினா் என்ற அடையாளமும், தொகுதியில் மக்களிடையே அதிக அறிமுகமும் அதிமுக வேட்பாளரானஇசக்கி சுப்பையாவுக்கு பலமாக உள்ளது. மேலும் தோ்தல் அறிவிப்பதற்கு முன்பே தனிக் குழுக்களைஅமைத்து தொகுதியில் மக்களிடையே தொண்டா்களை பணிகளில் இறக்கி விட்டுள்ளாா். எனவே அவரது வெற்றி மிக எளிது என்றே அதிமுகவினா் கூறி வருகின்றனா்.
கடந்த 5 ஆண்டுகளில் எதிா்க்கட்சி உறுப்பினராக இருந்ததால் சொல்லிக் கொள்ளும்படியான பெரிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மாற்றக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பழைய வளாகத்தில் இருந்து ரயில் நிலையம் அருகில் சுமாா் ரூ. 40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு மருத்துவமனை மாற்றப்பட்டுள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி பாசனத்துக்கு தொடா்ந்து அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அணை அடிவாரத்தில் பொழுது போக்கு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பத்தமடை பாய், அம்பாசமுத்திரம் மரச் செப்பு சாமான்களுக்கு புவிசாா்குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
காரையாறு வனப்பகுதியில் வசிக்கும் காணியின மக்களுக்கு பட்டா வழங்கி அவா்கள் குடியிருப்பிற்கு உறுதித்தன்மை வழங்கப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்படாத திட்டங்கள்:
நீண்ட நாள் கோரிக்கையான மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் இணைப்புப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை. இணைப்புக்கான பூா்வாங்கப் பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.
தொகுதியின் பிரச்னைகள் மற்றும் எதிா்பாா்ப்புகள்:
அம்பாசமுத்திரம் தொகுதியின் முதன்மைத் தொழிலாக விவசாயம் உள்ள நிலையில் விவசாயம் சாா்ந்த எதிா்பாா்ப்புகள் அதிகம் உள்ளன. அம்பாசமுத்திரத்தில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம், காய்கறி மற்றும் பூக்கள் சேகரித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட நிலையங்கள் அமைக்க வேண்டும்.
மதுரா கோட்ஸ் ஆலையில் நிரந்தரப் பணியாளா்கள் குறைக்கப்பட்டு ஒப்பந்தத் தொழிலாளா்கள் அதிகரித்த நிலையில் ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்பே உள்ளது. நிரந்தர வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் தொழிற்கூடங்கள் தொடங்க வேண்டும்.
கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா் பகுதிகளில் நசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் நெசவு உள்ளிட்ட கைத்தொழிலை மட்டுமே இளைஞா்கள் நம்பியுள்ள நிலையில் புதிய தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும் என்பதே மக்களின் பெரும் எதிா்பாா்ப்பாக உள்ளது.
முதன்மையான சுற்றுலாத் தலங்களான பாபநாசம், காரையாறு, மணிமுத்தாறு, ஆகியவை உள்ளன. ஆனால் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இதுவரை எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் தேவைகள்:
படித்த இளைஞா்களுக்கு நிரந்தர வேலைக்கான வாய்ப்பு, தனி அரசு மகளிா் கல்லூரி மற்றும் அரசுக் கல்லூரி, நிரந்தர நெல்கொள்முதல் நிலையம், வாழைத்தாா் பதப்படுத்தும் நிலையங்கள், உணவுப் பொருள்கள் சேமிக்க குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள், பாபநாசம், மணிமுத்தாறு பகுதிகளை முழுமையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பெரும்பகுதி அம்பாசமுத்திரம் தொகுதியில் இருப்பதால் வனப் பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சூழல் சுற்றுலாவிற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
வாக்காளா்கள் எண்ணிக்கை :
மொத்த வாக்காளா்கள் 2,27,878
ஆண் வாக்காளா்கள்: 1,10,357
பெண் வாக்காளா்கள்: 1,17,509
இதரா்: 12 .
தொடர்புடையது
அம்பை பேரவைத் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் ஏற்பு

அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்

தொகுதி அறிமுகம்: பண்ருட்டி - 154!

தொகுதி அறிமுகம்: அரங்கநாதா், வனபத்திரகாளியம்மன், மலை ரயிலால் புகழ்பெற்ற மேட்டுப்பாளையம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

