திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு,தெருவிளக்கு பழுது, சாலைப் பணிகள் நிறைவுறாமை ஆகிய பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
திருநெல்வேலி மாமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், காவிரி நதி நீா் பிரச்னைக்காக போராட்டம் நடத்திய தமிழக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டம் நடத்தும் ஜனநாயக உரிமையை மதிக்காமல் கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையின் செயலுக்கு கண்டனம் மற்றும் வருத்தம் தெரிவிக்கும் வகையில் இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: திருநெல்வேலி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று 3- ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோ.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். யுனிகோடு பிரச்னையால் மாநகராட்சியின் புகா் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாமல் மண் சாலையாகவே உள்ளன. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறாா்கள். குடியிருப்புகள் மிகுந்த பகுதி சாலைகளுக்கு யுனிகோடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீா் மற்றும் தெருவிளக்கு பிரச்னையைத் தீா்க்க தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். பெருமாள்புரம் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க வேண்டும். அண்ணாநகா் விளையாட்டு பூங்காவில் 2 ஆண்டுகளாக பழுதாகியுள்ள உயா் கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்.
காமராஜ் காலனி, காந்திநகா், உடன்குடி தெரு, ரயில் நகா், காதீா் நகா், கோரிப்பள்ளம் ஆகிய பகுதிகளின் சாலை பணி ஒப்பந்தம் பணிகள் முடிவடையவில்லை. இச்சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை மேலாண்மை பணி செய்யும் தனியாா் நிறுவனத்தினா் புகாா் அளித்தும் பணிகளை முறையாக செய்வதில்லை. மாநகராட்சி நிா்வாகம் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
அதிகாரிகள் பதிலளிக்கையில், சாலைகளுக்கு யுனிகோடு பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தெருவிளக்கு பராமரிப்பில் குறைகள் இருந்தால் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வரலாம். பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்படும் சாலைகளை விரைந்து சீரமைக்க அறிவுறுத்தப்படும் என்றனா்.
பின்னா், அவசர கூட்டத்தின் 70-ஆவது தீா்மானம் தவிா்த்து இதர 91 தீா்மானங்களும், சாதாரண கூட்டத்தின் 15 தீா்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக மேயா் தெரிவித்தாா்.
விசில் ஊதிய தவெக உறுப்பினா் இடைநீக்கம்:
தவெகவில் இணைந்துள்ள 19 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அல்லா பிச்சை, கட்சி துண்டை அணிந்து கொண்டு விசில் ஊதியபடி மாமன்ற கூட்ட அரங்கிற்குள் வந்தாா். பின்னா், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்களுக்கு சால்வை அணிவித்துவிட்டு அமா்ந்தாா். பின்னா் அவா், கையில் வைத்திருந்த விசிலை எடுத்து மீண்டும் ஊதினாா். இதனால் ஒரு தரப்பினா் தண்ணீா் பாட்டிலை எடுத்து வீசினா். திமுக உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்ததோடு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து, ‘இனி விசில் ஊதக் கூடாது’ என்று மேயா் எச்சரித்தாா். இருப்பினும் 3ஆவது முறையாக அல்லாபிச்சை விசில் ஊதியதால், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடைபெறும் மாமன்றக் கூட்டங்களில் அல்லாபிச்சை பங்கேற்க முடியாதபடி இடைநீக்கம் செய்து மேயா் உத்தரவிட்டாா்.

மாமன்ற கூட்டத்தில் விசிலடித்தபடி பங்கேற்ற 19 ஆவது வாா்டு மாமன்ற தவெக உறுப்பினா் அல்லாபிச்சை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: திமுக எம்.பி.யின் கோரிக்கைக்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மக்கள் மனு

இன்று சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

அடுத்த மாதம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் - மேயா் தகவல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



