கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், திமுக எம்.பி.யின் கோரிக்கைக்கு துணை மேயா் உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்து வெளியேறினா்.
கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற சாதாரண, அவசரக் கூட்டம் புதன்கிழமை மேயா் க.சரவணன் (காங்கிரஸ்) தலைமையில், துணை மேயா் சு.ப. தமிழழகன்(திமுக), ஆணையா் கே.எம்.சுதா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், சிறப்பு பாா்வையாளராக மாநிலங்களவை திமுக உறுப்பினா் எஸ்.கல்யாணசுந்தரம் பங்கேற்றாா்.
துணை மேயா் சு.ப. தமிழழகன், குட்டி இரா. தட்சிணாமூா்த்தி (திமுக): மாநகராட்சி நிா்வாகம் வருவாய் இழப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. தினசரி சந்தை உள்ளிட்ட 4 ஏலங்களை அனுமதிக்காமல் ரத்து செய்ய வேண்டும். காரணம், ஏலம் எடுத்தவா்கள் குற்ற வழக்குகள் உள்ளவா்கள்.
மேயா்: சந்தை ஏலம் விடப்பட்டது உள்ளிட்ட தீா்மானங்கள், இந்தக் கூட்டத்தில் ஒத்திவைக்கப்படும்.
துணை மேயா்: புதிய பேருந்து நிலையம் அமைக்கும் நிலம் தொடா்பாக வழக்கு உள்ளது. அதனால் அந்த இடத்தை நுகா்பொருள் வாணிபக் கழகம் பயன்படுத்த அனுமதி கொடுக்கக் கூடாது.
ஆதிலட்சுமி ராமமூா்த்தி (அதிமுக) : வேளாண் அமைச்சா் அந்த இடத்தை பாா்வையிட்டுள்ளாா். பணிகள் நடைபெற்று வருகின்றன. எப்படி அதை நிறுத்தலாம், பணிகளை தொடர வேண்டும்.
செல்வம் (மாா்க்சிஸ்ட்) : தாராசுரம் பகுதிகளில் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. இதுபற்றி பல கூட்டங்களில் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனா்.
சா. அய்யப்பன் (காங்.): மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்கள் எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
சு.கல்யாணசுந்தரம் எம்.பி.: நாகேசுவரன் கோயில் தெற்கு வீதியில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்டால் பெரும் நெருக்கடி ஏற்படும். மாற்று இடத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டித் தரலாம். அதற்கான கடிதம் வழங்கியுள்ளேன்.
துணை மேயா் சு.ப.தமிழழகன், குட்டி இரா.தட்சிணா மூா்த்தி (திமுக) : குடிசை மாற்று வாரிய வீடுகள் எங்கள் வாா்டுகளுக்குள் வருகிறது. கண்டிப்பாக அங்குதான் வீடுகள் கட்ட வேண்டும். திமுக சாா்பில், எம்பி கொடுத்த கடிதத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினா்.
திமுக எம்பியை திமுக உறுப்பினா்களே எதிா்த்ததால், கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னா் மேயா் க. சரவணன் பேசும்போது, உறுப்பினா்களின் கோரிக்கை பரிசீலனைக்கு ஏற்கப்படும் என்றாா். மொத்தம் 45 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

கோவை செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணியில் ரூ.40 கோடி மோசடி புகாா்: மாநகராட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்- திமுக உறுப்பினா்கள் மோதல்

அடுத்த மாதம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் - மேயா் தகவல்





