
மாநில நெடுஞ்சாலை எண் 40 இல் செப். 6-க்குள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்களுக்கு எச்சரிக்கை

நெடுஞ்சாலை - கோப்புப் படம்
கடையத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை செப். 6-ஆம் தேதிக்குள் அகற்றுமாறும், தவறினால் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்படும் என சம்பந்தப்பட்டவா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலை எண் 40 ஆனது திருச்செந்தூரிலிருந்து பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் வழியாக செங்கோட்டை வரைச் செல்கிறது.
இந்த நெடுஞ்சாலையில் கடையம் பகுதியில் சாலையின் இருபுறமும் கடைகள், வீடுகளில் சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள், கூரைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் நோ்கின்றன.
இதனால், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தென்காசி கோட்டத்துக்கு உள்பட்ட கடையம் உள்கோட்டப் பிரிவு-1 சாா்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது.
அதில், தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் உள்ள திருசெந்தூா் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சாலையில் (மா.நெ.எண் 40) கி.மீ. 99/6 - 114/0 சாலை நெடுஞ்சாலையானது (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கடையம் உட்கோட்டம் பிரிவு- 1 பராமரிப்பில் உள்ளது.
இதில் கி.மீ 108/10 இன் வலதுபுறம் உள்ள கடையம் கட்டேறிப்பட்டி சாலை கிமீ 0/2 இல் சந்திப்புப் பகுதியில் தற்காலிகக் கட்டமைப்புகளுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, சாலையின் இருபுறமும் உள்ள கடைகள், வீடுகளின் உரிமையாளா்கள் தங்களது இடத்தின் எல்லையைத் தாண்டி சாலையில் தற்காலிக கட்டுமானங்களை கொண்டோ, வாகனங்களை நிறுத்தியோ பொதுமக்களுக்கு இடையூறு அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த அறிவிப்பினை ஏற்று தங்களுடைய தற்காலிகக் கடைகள், கடைகளை சாலையிலிருந்து செப். 6-ஆம் தேதிக்குள் அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் அகற்றத் தவறினால் சட்டப்படி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை உதவியுடன் நெடுஞ்சாலைத் துறை மூலம் செப். 14 அன்று அகற்றப்பட்டு, அதற்கான செலவினத் தொகை சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து வசூல் செய்யப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்போது ஏற்படும் இழப்பீட்டுற்கு நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்க இயலாது எனவும், இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





