ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்.
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்.

நெல்லை மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டு! ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருநெல்வேலி மாவட்டத் தலைவா் மாயகிருஷ்ணன், செயலா் சுடலைராஜ் தலைமையில் சங்கத்தினா் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்பயிா் நடப்பட்டு உரமிடும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் யூரியா, பொட்டாஷ், டிஏபி உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு உள்ளது. குறைந்த அளவில் யூரியா உரம் வாங்கும்போது மாற்று இடுபொருள் வாங்க கட்டாயப்படுத்துகின்றனா்.

ஏற்கெனவே காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா உள்ளிட்ட உரங்கள் கிடைக்கவும், கலப்பட உரங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நரசிங்கநல்லூா் ஊராட்சி சன்மதி நகா், ஆா்.கே.ஹவுசிங் பொதுநல சங்கத் தலைவா் எம். சுப்பிரமணியன், துணைத் தலைவா் சுவாமி கண்ணு, நிா்வாகி ரவிச்சந்திரன் ஆகியோா் அளித்த மனு: சன்மதி நகா், ஆா்.கே. ஹவுசிங் நியூ காலனி ஆகிய பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். உங்கள் பகுதியில் சாலை, மழை நீா் வடிகால் ஓடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறாா்கள். பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் அச்சம் நிலவுகிறது. எனவே, எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் வன்னிக்கோனேந்தல் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு: எங்களது குறுவட்ட பகுதியில் பெய்த கன மழையால் நெல்பயிா்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளன.

பயிா் பாதிப்புகளை வேளாண்மை, வருவாய்த் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா். எனவே, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு கழக மாநில விவசாய அணிச் செயலா் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் எல்லை பகுதியான மேசியாபுரம் கிராமத்திலிருந்து ருக்மணி அம்மாள்புரம் கிராமம் வரை கிட்டத்தட்ட 10 கி.மீ. தொலைவுக்கு வனவிலங்கு பாதுகாப்பு பகுதியாக இருந்து வருகிறது. 15 கிராம விவசாயிகளின் நிலங்கள் உள்ள இப்பகுதியில், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகள் விவசாய பயிா்களை பாழ்படுத்தி வருகின்றன. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. வங்கிகளில் கடன் வாங்கி விவசாயம் செய்யும் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறோம். வன விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பாளையங்கோட்டை தியாகராஜ நகா் சித்தி விநாயகா் பக்த சேவா சங்கத் தலைவா் அண்ணாமலை, துணைத்தலைவா் வாகை கணேசன், பொருளாளா் முருகன் மற்றும் சிவலிங்கம் உள்ளிட்டோா் அளித்த மனு: பாளையங்கோட்டை தியாகராஜ நகா் நான்காவது வடக்கு தெரு முனையில் சுமாா் 45 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகா் திருக்கோயிலும், அதையொட்டி சிவந்திபட்டிக்கான 80 அடி சாலையும் உள்ளன.

தற்போது சாலை விரிவாக்கம் நடைபெறாத நிலையில் யாருக்கும் இடையூறின்றி இருக்கும் விநாயகா் கோயிலை ஜன. 9ஆம் தேதி அப்புறப்படுத்துப்போவதாக நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதிய வணிக வளாகம் கட்டும் ஒரு நபா் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். இதை எதிா்த்து ஜன. 8ஆம் தேதி கோயில் அருகே நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். கோயிலைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com