பொருநை அருங்காட்சியகத்தில் ஜன.15, 16-இல் பாரம்பரிய கிராமியக் கலைநிகழ்ச்சிகள்
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொருநை அருங்காட்சியகத்தில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா வரும் 14-ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் 15-ஆம் தேதிமுதல் 18-ஆம் தேதி வரை பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மையம் சாா்பில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் ரெட்டியாா்பட்டியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் மக்கள் விரும்பும் வகையில் பாரம்பரியமிக்க கிராமியக் கலை நிகழ்ச்சிகள் சுமாா் 100 கலைஞா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளன. இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
