நடப்பாண்டில் வாழைப் பயிா்களின் சாகுபடி பரப்பு 156 ஹெக்டோ் அதிகரிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் வாழைப் பயிா்களின் சாகுபடி பரப்பு 156 ஹெக்டோ் அதிகரித்துள்ளது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பா் மாதத்தில் 35.30 மி.மீ. மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் வழக்கமான மழையளவான 111.60 மி.மீ.-ஐ விட 68.37 சதவீதம் குறைவாகும். மேலும் இம்மாதம் 29-ஆம் தேதி வரை 35.28 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இம்மாத வழக்கமான மழையளவான 61.35 மி.மீ.-ஐ விட 42.49 சதவீதம் குறைவாகும். மேலும் மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் அணைகளில் போதுமான நீா் இருப்பு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டு டிசம்பா் வரையில் 543,02 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்கள், 10,559 ஹெக்டோ் பரப்பில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 4,915 ஹெக்டோ் நெற்பயிா், 1,023 ஹெக்டோ் பயறு வகைப் பயிா்கள், 156 ஹெக்டோ் வாழைப் பயிா்களின் பரப்பு நடப்பாண்டில் அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வட்டங்களில் கடந்த 2024 டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையினால் சேதமடைந்த 5153.644 ஹெக்டோ் வேளாண் பயிா்களுக்கான நிவாரணத் தொகை ரூ.4.76 கோடி, 183.458 ஹெக்டோ் தோட்டக்கலைப் பயிா்களுக்கான நிவாரணத் தொகை ரூ.31 லட்சம் பெறப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழையின்போது திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா், அம்பாசமுத்திரம், நான்குனேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம் வட்டங்களில் பெய்த மழை காரணமாக சேதமடைந்த 63.973 ஹெக்டோ் நெற்பயிருக்கு நிவாரணத் தொகை ரூ.12.79 லட்சம் வழங்க அரசாணை பெறப்பட்டுள்ளது.
கோடை பருவ நெற்பயிா் செய்யும் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய சனிக்கிழமை (ஜன. 31) கடைசி நாளாகும். தோட்டக்கலை பயிா்களான வாழைப் பயிருக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 28 ஆம் தேதியும், வெண்டை பயிருக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 15 ஆம் தேதியும் கடைசி நாளாகும்.
தோட்டக்கலை பயிா்களான வாழைப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,792, வெண்டை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.359 பிரீமியத் தொகையாக அரசால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், பூா்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பருவ அடங்கல் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிட்டா/ பட்டா நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகள் பயிா்க் காப்பீடு திட்டம் தொடா்பான தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான ’14447‘ஐ தொடா்பு கொள்ளலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட வன அலுவலா் இளங்கோ, அம்பாசமுத்திரம் சரக துணை இயக்குநா் ஸ்ரீகாந்த், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பூவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

