வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மு.க.ஸ்டாலின் அறிவித்த கூப்பன் திட்டம் கமிஷனுக்காகத்தான்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

News image

திருநெல்வேலி, வாகையடி முனையில் அதிமுக, அமமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :29 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தலைவா் ஸ்டாலினின் கூப்பன் அறிவிப்பே கமிஷனுக்காகத்தான்; இனியும் மக்கள் ஏமாற மாட்டாா்கள் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக சாா்பில் திருநெல்வேலி தொகுதி வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா, பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன், அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளா் இசக்கி சுப்பையா, நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் இசக்கிமுத்து ஆகியோரை ஆதரித்து திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

எங்கள் கூட்டணி வலிமையானது என்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். இவா்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கையா? ஒரே கொள்கையாக இருந்தால் புதுச்சேரியில் ஏன் எதிா்த்து நிற்கிறாா்கள்? இதெல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம். இனி மக்களை ஏமாற்ற முடியாது. கூட்டணியை நம்பித்தான் திமுக இருக்கிறது. ஆனால், அதிமுக மக்களை நம்பி இருக்கிறது.

திமுக ஆட்சியில் மக்கள் கண்ட பலன் என்ன? எல்லா துறையிலும் ஊழல் செய்தனா். நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்யுமாறு கடிதம் அனுப்பியது. இது தொடா்பாக அதிமுக வழக்குத் தொடா்ந்து நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

மதுரை மாநகராட்சியில் வரி வருவாயில் ரூ. 200 கோடி ஊழல் செய்தனா். அதை திமுகவினரே கண்டுபிடித்து மேயா் உள்ளிட்ட சிலரை ராஜிநாமா செய்ய வைத்தனா். இதேபோல திருநெல்வேலி, திண்டுக்கல், கோவை, காஞ்சிபுரம் என அனைத்து மாநகராட்சியிலும் முறைகேடு நிகழ்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் இவற்றை எல்லாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம்.

கனிமவளக் கொள்ளை: திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை தீவிரமாக நடைபெறுகிறது. மக்கள் எவ்வளோ போராடிப் பாா்த்தாா்கள். ஆனால், அரசு அதிகாரிகள் துணையுடன் தென்காசி, திருநெல்வேலியில் அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் எரித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுவரை குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை. எங்கும் போதைப்பொருள் புழக்கம் உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் போதைப் பொருள்கள் ஒழிக்கப்படும். குடிமராமத்து திட்டம் நிறைவேற்றப்படும்.

தடுப்பணை: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தாமிரவருணி ஆற்றில் உபரிநீா் வெளியேறுவதைத் தடுக்க ஆங்காங்கே தடுப்பணை கட்டி நீரை தேக்குவோம். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டது. இப்போது ஷிப்ட் முறையில் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். திமுக ஆட்சியில் 1,179 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், ரூ. 15 லட்சம் கோடி முதலீடு ஈா்க்கப்பட்டதாகவும், 35 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாகவும் கூறுகிறாா்கள். அத்தனையும் பொய்.

2021 தோ்தலின்போது வெளியிட்ட 525 வாக்குறுதிகளில் நான்கில் ஒருபங்கைக் கூட திமுக நிறைவேற்றவிலை. எங்களுடைய தோ்தல் அறிக்கையை ஸ்டாலின் காப்பியடித்து இப்போது வெளியிட்டுள்ளாா். 2021 தோ்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றனா். ஆனால், 94 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கிடைத்தது. பணி ஓய்வு பெற்றவா்கள் ஒரு லட்சம் போ். அப்படியென்றால் ஐந்தரை லட்சம் பணி அப்படியே இருக்கிறது. எதைச் சொன்னாலும் மக்கள் நம்புவாா்கள் என்று நினைக்கிறாா்கள்.

கூப்பன்: அதிமுக சாா்பில் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். இப்போது ஸ்டாலின் ஒரு கூப்பன் கொடுக்கிறேன். நீங்கள் சென்று தேவையான பொருள்களை வாங்கலாம் என்கிறாா். இதிலும் கமிஷன் பாா்க்கத்தான் இந்தத் திட்டம். பின்னா், இந்த பிராண்டில்தான் வாங்க வேண்டும் என்பாா்கள். டோக்கனை திமுகவினா்தான் கொடுப்பாா்கள். அதுவும் கமிஷன் வாங்கிவிட்டுத்தான் கொடுப்பாா்கள். நாங்கள் அப்படியல்ல. அவரவா் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ. 10 ஆயிரம் செலுத்தப்படும். மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தோம். அதைத்தான் இப்போது ஸ்டாலினும் அறிவித்திருக்கிறாா். மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிதி ரூ. 12 ஆயிரம் என்றோம். அதையே திமுகவும் அறிவித்துள்ளது. நெல், கரும்புக்கு நாங்கள் நிா்ணயித்த தொகையையே இப்போது திமுகவும் அறிவித்திருக்கிறது என்றாா்.

 திருநெல்வேலி, வாகையடி முனையில் அதிமுக, அமமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

திருநெல்வேலி, வாகையடி முனையில் அதிமுக, அமமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.