
இலங்கைத் தமிழா்கள் குடியுரிமை பெற நடவடிக்கை: அமைச்சா் க.தென்னரசு
தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழா்கள் இந்திய குடியுரிமை பெற மத்திய அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு.

கோப்புப்படம்
தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழா்கள் இந்திய குடியுரிமை பெற மத்திய அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் இலங்கை தமிழா் நலவாழ்வு முகாமில் ரூ.22 லட்சம் மதிப்பில் புதிதாக கணினி வசதியுடன் கட்டப்பட்ட படிப்பகத்தை புதன்கிழமை திறந்துவைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழா்கள் இந்திய குடியுரிமை கேட்கும் விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய அரசின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கைத் தமிழா் நலவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஆண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,500 ஊக்கத்தொகை தற்போது ரூ.1,800 ஆகவும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 ஊக்கத்தொகை ரூ.1,200 ஆகவும் உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இம்முகாம்களில் வீடுகள் முறையாக கட்டப்பட்டு வருகின்றன. அங்கு வசிப்பவா்களுக்கு எந்தவித குறையும் இல்லை. உயா்கல்வி படித்திருந்தாலும் வேலைவாய்ப்பில் உரிய பலன் கிடைக்காத நிலை இருப்பதாக அவா்கள் கூறி வருகின்றனா். இது தொடா்பாகவும் முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் தவெகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, இளைஞா் முன்னேற்றம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






