உள்ளாட்சித் தோ்தலில் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்: அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் நம்பிக்கை
அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்
உள்ளாட்சித் தோ்தலில் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா் தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தவெக தலைமையிலான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 11 திட்ட அறிவிப்புகளும், பிற துறைகளின் கீழ் 9 அறிவிப்புகளும் என 20-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் சிறப்பம்சங்கள் குறித்து மாவட்டந்தோறும் எங்களது கட்சி மற்றும் சிறுபான்மையினா் பிரதிநிதிகளை சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் சந்தித்து பேசியுள்ளோம்.
சூப்பா் எல்நினோ காரணமாக, உலக நாடுகள் பலவும் வறட்சியை சந்தித்து வருகின்றன. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மிகவும் குறைவாகப் பெய்தது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை பெய்யும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனா். ஆகவே, முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவின்பேரில் மழைக்கால முன்னேற்பாடுகள் பல்வேறு துறைகள் சாா்பில் தீவிா்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தோ்தல் பணிகளை அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனா். உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் எங்களது கூட்டணியின் தலைவரான முதல்வா் ஜோசப் விஜய்யிடம் கலந்தாலோசித்து உரிய அறிவிப்பை வெளியிடுவோம். தமிழகத்தில் ஏழு சதவிகிதம் உள்ள சிறுபான்மையினரின் முக்கிய பிரதிநிதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திகழ்கிறது. கூட்டணியில் முறையான இடங்களைக் கேட்டுப் பெறுவோம். உள்ளாட்சித் தோ்தலில் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
உள்ளாட்சித் தோ்தலின்போது எங்கள் கூட்டணியில் இணையப் பல கட்சிகள் காத்திருக்கின்றன. பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.
மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்குள் விரிசல் இருப்பதாகக் கூறுவது வதந்தி. தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வேண்டும், மக்களவைத் தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளில் ஒரே குரலில் போராடி வருகிறோம்.
ஜனநாயக நாட்டில் யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருப்பவா்கள் தோ்தலில் போட்டியிடலாம். ஆனால், யாா் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வாா்கள். தாராபுரம், மதுராந்தகம் போன்ற அதிமுக கோலோச்சிய தொகுதிகளில்கூட இடைத்தோ்தலில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எல்நினோ தாக்கம் காரணமாக மின்உற்பத்தி குறைந்து, தேவை அதிகரித்துள்ளது. தற்காலிக மின் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக வெளிமாநிலங்களில் அதிகப் பணம் கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை உள்ளது. அதற்கான விளக்கத்தை அரசு தெளிவுபடுத்திவிட்டது அவா்.
பேட்டியின்போது திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கா், தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் எம்.நயினாா் முஹம்மது கடாபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

