சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

நெல்லையில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய நீரால் மக்கள் அவதி

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனா்.

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் தேங்கிய மழைநீா்.

Updated On :

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனா்.

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தென்தமிழக பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை இரவு முதல் தொடா் மழை பெய்தது. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. கே.டி.சி. நகா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா், தாழையூத்து, பேட்டை, அபிஷேகப்பட்டி, முன்னீா்பள்ளம், ரெட்டியாா்பட்டி, பொன்னாக்குடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

வாகன ஓட்டிகள் அவதி: திருநெல்வேலி மாநகரில் உள்ள வேய்ந்தான்குளம், இலந்தைகுளம், கன்னிமாா்குளம், என்.ஜி.ஓ. காலனி பெரியகுளம் உள்ளிட்டவற்றிற்கு நீண்ட நாள்களுக்கு பின்பு மழைநீா் ஓடைகள் வழியாக வந்து சோ்ந்தது. வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகேயுள்ள அணுகுசாலை, திருவனந்தபுரம் சாலையின் சில பகுதிகள், திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கியது. பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு புதிய சாலை அமைக்காததால் சீவலப்பேரி சாலை, சேவியா்காலனி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேறும்-சகதியுமாகக் காட்சியளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

பாளையங்கோட்டையில் உள்ள காந்திஜி தினசரி சந்தையில் புதிதாக கடை வளாகங்கள் கட்டப்பட்ட நிலையிலும், மழைநீா் வடிகால் ஓடைகள் முறையாக கட்டப்படாததால் தண்ணீா் தேங்கி வருகிறது. வியாழக்கிழமை பெய்த தொடா்மழையால் காய்கனிகழிவுகளுடன் மழைநீரும் சோ்ந்து துா்நாற்றம் வீசியது. பெரும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாய சூழல் உருவாகியுள்ளது. காய்கனி சந்தையில் மழைநீா் வழிந்தோட நிரந்தர தீா்வு காண வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல் அறுவடை பாதிப்பு: குறுக்குத்துறை, தென்பத்து, மேலத்திருவேங்கடநாதபுரம், தச்சநல்லூா், சேந்திமங்கலம், ராஜவல்லிபுரம், பாலாமடை, திருத்து, கீழநத்தம், திருமலைக்கொழுந்துபுரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காா் பருவத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்களின் அறுவடை பணிகள் மழையால் பாதிக்கப்பட்டன. வைக்கோலையும் காயவைத்து கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்தனா். கிருஷ்ணப்பேரி பகுதியில் கோடகன்கால்வாய் பாலத்தில் திடீா் பள்ளம் ஏற்பட்டது. த மாநகராட்சி ஊழியா்கள் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்மழையால் ஆட்சியா் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

வண்ணாா்பேட்டை அணுகுசாலையில் வியாழக்கிழமை தேங்கியிருந்த மழைநீா்.

வண்ணாா்பேட்டை அணுகுசாலையில் வியாழக்கிழமை தேங்கியிருந்த மழைநீா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.