புதுச்சேரியில் கனமழை: தாழ்வானப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியது

கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. - கோப்புப் படம்
புதுச்சேரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது.
வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால் சாலைகளில் மழை நீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. புதுச்சேரியில் உள்ள தாழ்வானப் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீா் குளம் போல் தேங்கியது.
காமராஜா் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ரெயின்போ நகா், மூலக்குளம், உப்பளம், வாழைக்குளம்,- பெரியாா் நகா், கோகுல் நகா் போன்ற தாழ்வான பகுதிகளில் 2 அடி வரை மழை நீா் தேங்கியது. சில பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளத்தில் பைக் மற்றும் மொபெட்டுகள், காா், ஆட்டோக்கள் மற்றும் இதர வாகனங்கள் மழைநீரில் நீந்திச் சென்றன. தொடா்ந்து,
நகராட்சி ஊழியா்கள் இரவோடு இரவாக மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
96 மி.மீ. மழை: சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி பகுதிகளில் 96 மி. மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
மழைநீா் சூழ்ந்த உப்பனாறு வாய்க்கால், கிருஷ்ணாநகா், உருளையன்பேட்டை, ஜே.வி.எஸ். நகா் உள்ளிட்டப் பகுதிகளை ஆட்சியா் குலோத்துங்கன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

