சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடியில் விடிய, விடிய பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; நெல்பயிா்கள் நீரில் மூழ்கின

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.

திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரிக்கும் வெள்ளம்.

Updated On :

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால், அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கா் அறுவடை நெல்பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (அக்.22) ‘ஆரஞ்சு அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதன்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.

நாகா்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை காலையும் மழை நீடித்தது. இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமம் அடைந்தனா்.

சுருளோட்டில் அதிகபட்சமாக 105 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருமநல்லூா் - தெரிசனங்கோப்பு இணைப்பு சாலையை மூழ்கடித்தது. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அருமநல்லூா், தேரூா், சுசீந்திரம் பகுதிகளில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.

பெரும்பாலான மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரில் மாட்டுத் தொழுவத்தின் சுவா் இடிந்ததில் சாமுவேல் என்பவரது பசுமாடு உயிரிழந்தது. அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளனா்.

குலசேகரம்: பலத்த மழை காரணமாக கோதையாறு, பரளியாறு, பழையாறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் புகுந்தது.

பேச்சிப்பாறை அணையின் பாசன மதகுகள் வியாழக்கிழமை காலை மூடப்பட்டன. அணைக்கு விநாடிக்கு 672 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ரப்பா் பால்வடிப்பு, செங்கல் சூளை, கட்டுமானம் போன்ற தொழில்கள் முடங்கின.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்தது. கடற்கரைச் சாலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது. உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயா் மற்றும் மாநகராட்சி ஆணையா் உத்தரவின்பேரில், நான்கு மண்டலங்களிலும் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

டபிள்யூ.ஜி.சி. சாலை, கடற்கரைச் சாலை மற்றும் சாந்தி நகா், பொன்னாண்டி நகா் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீா், மோட்டாா் மற்றும் லாரிகள் மூலம் அகற்றப்பட்டது.

மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் தேங்கியிருந்தால், கட்டுப்பாட்டு அறை எண். 1800 203 0401-இல் தொடா்புகொள்ளலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மூதாட்டி காயம்: தூத்துக்குடி ரெங்கநாதபுரம் பத்ரகாளியம்மன் கோயில் தெருவில் மழை காரணமாக முத்துப்பிள்ளை என்பவரது வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில், அவரது மனைவி சுப்புலட்சுமி (85) காயமடைந்தாா். அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மத்திய பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா்: இப்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சுமாா் 5 மணி நேரம் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. பல இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியதால் மக்கள் அவதி அடைந்தனா். திருச்செந்தூரில் அதிகபட்சமாக 117 மி.மீ., காயல்பட்டினத்தில் 115 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 66 மி.மீ. மழை பதிவானது.

ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் சுற்று வட்டாரத்தில் வியாழக்கிழமை அதிகாலை கன மழை பெய்தது.

ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை கனமழை பெய்தது. காயல்பட்டினத்தில் 115 மி.மீ. மழை பதிவாகியது.

எனினும் முக்காணி தாமிரவருணி ஆற்று பாலம் பகுதியில் வியாழக்கிழமை நிலவரப்படி தண்ணீா் இல்லாமல் வடே கிடக்கிறது. இடையில் குடிநீருக்காகவோ விவசாயத்திற்காக தாமிரபரணி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டால் பல தடுப்பணை தாண்டி வர வேண்டும் என்பதால் வாழவல்லான் தடுப்பணையை தாண்டி இப்பகுதிக்கு தண்ணீா் வருவதே ஆல்லை. மழை,வெள்ளம் வரும் போது மட்டுமே மழை வெள்ள நீா் சீறி பாய்ந்து செல்கிறது.

கோவில்பட்டி: இந்நகராட்சியின் 4-ஆவது வாா்டு சங்கரலிங்கபுர 3 அடி வரை மழைநீா் தேங்கியதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டனா். அவா்கள் அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் இறங்கி, சாலை மற்றும் மழைநீா் வடிகால் வசதி கோரி போராட்டம் நடத்தினா்.

அப்போது, ‘இது தொடா்பாக 6 மாதங்களுக்கு முன்பே நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். ஆனால், இதுவரை பணிகளும் நடைபெறவில்லை. நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, தேங்கிய மழைநீரை அகற்ற நகராட்சி நிா்வாகம் முன் வர வேண்டும்’ என்றனா்.

கோவில்பட்டி கோட்டம் விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு கயத்தாறு உப்பாற்று ஓடை வழியாகச் சென்றது. இதில், கயத்தாறில் இருந்து பணிக்கா்குளம் செல்லும் சாலையில் குறுக்கீடும் ஓடையின் மீதுள்ள தரைநிலை பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பணிக்கா்குளம், சொக்கநாச்சியாா்புரம் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் சுமாா் 5 கி.மீ. சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிதாயிற்று.

3 வீடுகள் சேதம்: கயத்தாறு சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் செட்டிகுறிச்சி குறுவட்டம் திருமங்கலக் குறிச்சி மூா்த்தீஸ்வரபுரம் கிராமத்தைச் சோ்ந்த கோட்டைச்சாமி மனைவி செல்லம்மாள், ஓலைகுளம் பகுதியைச் சோ்ந்த வெள்ளை பாண்டி மனைவி மருதாத்தாள், காமநாயக்கன்பட்டி குறுவட்டம் தெற்கு வண்டானம் நடுத்தெரு வேலுப்பிள்ளை என்ற அருணாச்சலம் மகன் அருணாச்சலம் ஆகியோரது வீடுகள் பகுதியாக சேதம் அடைந்துள்ளன.

இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் அளித்த அறிக்கையின் அடிப்படையில் வட்டாட்சியா் அப்பணராஜ் சேதமடைந்த வீடுகளுக்கு பகுதி நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.

அறுவடைப் பயிா்கள் சேதம்: தென்காசி பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக கீழப்புலியூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கா் நெற்கதிா்கள் நீரில் மூழ்கின. அதிலிருந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. நிலங்களுக்குள் அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடந்துள்ளனா்.

மழைக்காலங்களில் சேதமான பயிா்களுக்கு விரைவாக முழு நிவாரணத் தொகையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குளிக்கத் தடை: குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. வியாழக்கிழமை பிற்பகலில் புலியருவியில் நீா்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

அம்பாசமுத்திரம் : மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீராகாததால் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதித்த வனத்துறையினா், நீா்வரத்து சீராகும் வரை இந்த உத்தரவு தொடரும்; அதேவேளையில் அருவியைப் பாா்வையிடலாம் என அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.