
பாபநாசம் அருகே கூண்டில் சிக்கிய கரடி
பாபநாசம் அருகே மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பில் தொந்தரவு செய்துவந்த பெண் கரடி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

பாபநாசம் அருகே அனவன் குடியிருப்பில் பிடிபட்டு முண்டந்துறை வனப் பகுதியில் விடப்பட்ட கரடி.
பாபநாசம் அருகே மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பில் தொந்தரவு செய்துவந்த பெண் கரடி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. கரடி பிடிபட்ட சிறிது நேரத்தில் அந்த இடத்தில் மேலும் ஒரு கரடி உலாவியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாபநாசம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கோரையாறு பீட், அனவன் குடியிருப்புக் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கரடி நடமாட்டம் இருந்து வந்தது. கடந்த செப். 12 ஆம் தேதி கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி கணேசமூா்த்தி என்பவா் காயமடைந்தாா். அச்சுறுத்தலைத் தொடா்ந்து கரடியைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை (செப். 16) இரவு 6 வயது மதிக்கத்தக்க பெண் கரடி வனத்துறை கூண்டில் சிக்கியது. அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா், வன உயிரினக் காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக் கால்நடை மருத்துவா் மனோகரன் வழிகாட்டுதலின்படி முண்டந்துறை வனச்சரகம், கொடமாடி பீட் வனப் பகுதியில் பிடிபட்ட கரடி பாதுகாப்பாக விடப்பட்டது.
கூண்டில் கரடி சிக்கிய சிறிது நேரத்தில் அந்தப் பகுதியில் மற்றொரு கரடி உலாவியது. இதை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிலா் படம் பிடித்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா். இதனால், அனவன் குடியிருப்பு மக்கள் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து வனத்துறையினா் கூறுகையில், வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் வன விலங்குகள் நடமாட்டம் தென்பட்டால், பொதுமக்கள் அவற்றை நெருங்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது. அருகில் உள்ள வனத் துறை அலுவலா்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.

அனவன்குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







