இன்று உலக சுற்றுலா தினம்: குமரியில் அறிவிப்போடு நிற்கும் புதிய சுற்றுலாத் திட்டங்கள் உயிர் பெறுமா?
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென்று சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென்று சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குமரியின் சுற்றுலா சிறப்பு: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால் வகை நிலங்களைக் கொண்டது குமரி மாவட்டம். வான் தொடும் மலைகளும், வற்றாத ஆறுகளும், ஆர்ப்பரிக்கும் அருவிகளும், பசுமை போர்த்திய வயல்களும், நீலக் கடலும் இம்மாவட்டத்தின் சிறப்பு. இது தவிர வீரத்துறவி விவேகானந்தர் மண்டபம், உலகப் பொதுமறை தந்த ஐயன் திருவள்ளுவர், மன்னர் ஆட்சியின் சாட்சியாய் திகழும் பத்மநாபபுரம் அரண்மனை, சுசீந்திரம், திருவட்டாறு கோயில்கள், பெண்களின் சபரி மலையான மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா, கோட்டாறு தேவாலயங்கள், புனித சவேரியார் தேவாலயம், புலியூர்குறிச்சி தேவசகாயம் திருத்தலம் என எண்ணற்ற தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.
ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இம்மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல் மற்றும் புதிய சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே உள்ளதாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சுற்றுலாத் தலங்களை இணைக்கும் பேருந்துகள் இல்லை: மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் கோதையாறு வரை சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்கள் இருந்தும் அவற்றை இணைக்கும் வகையில் சிறப்பு சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர்.
கிடப்பில் உள்ள சூழியல் சுற்றுலாத் திட்டம்: மாவட்டத்தில் கடந்த ஆண்டு செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட சூழியல் சுற்றுலாத் திட்டம், இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது.
அறிவிப்போடு முடிந்து போன ஹெலி டூரிசம் திட்டம்: குமரி மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது ஹெலி டூரிசம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் தொடர்ந்து கூறி வந்த நிலையில் அத்திட்டம் அறிவிப்போடு நின்று போனது.
வீடுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் திட்டம்: மாவட்டத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வீடுகளில் தங்க வைத்து உபசரிக்கும் திட்டம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திற்பரப்பு அருவியில் நடைபெற்ற அருவி விழாவில் மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
திற்பரப்பில் நடத்தப்படாத அருவி விழா: குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீசன் காலத்தில் மூன்று நாள்கள் அருவித் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தற்போது அருவித் திருவிழா கைவிடப்பட்டுள்ளது.
உலக சுற்றுலா தினம்: எனவே உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் வேளையில் குமரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில் அறிவிப்போடு நிற்கும் புதிய சுற்றுலாத் திட்டங்களை செயல்வடிவத்துக்கு கொண்டு வருவதோடு, அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

