அழிவின் பிடியிலிருந்து கருங்கல் மலை பாதுகாக்கப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்லில் உள்ள கருங்கல் மலை அழிவின் பிடியில் உள்ளதால், அதைப் பாதுகாக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்லில் உள்ள கருங்கல் மலை அழிவின் பிடியில் உள்ளதால், அதைப் பாதுகாக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்கல் நகரின் அடையாளமாக, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு குன்றாக அமைந்திருப்பது கருங்கல் மலை. கல்குளம் வட்டம் கப்பியறை பேரூராட்சியில் சுமார் 500 ஏக்கர் உள்ள இந்த மலையின் கிழக்கே கப்பியறை, மேற்கே கருங்கல், வடக்கே பள்ளியாடி, தெற்கே மத்திகோடு அமைந்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்ச கம்பீரமாக காட்சி தந்த இந்த மலை, தற்போது அழிவின் பிடியில் உள்ளது. மலை உச்சியில் அரசுக்கு சொந்தமாக 36 ஏக்கரில் பழத்தோட்டம் உள்ளது.
மலையிலிருந்து வெளியேறும் மழைநீர் பல குளங்களுக்கு சென்று, மறுகால் மூலமாக பாம்பூரி வாய்க்கால் வழியாக கடலில் கலக்கிறது.
குளத்து நீரை பயன்படுத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இந்தக் குளங்களுக்கு வரும் கால்வாய்கள் பல அழிக்கப்பட்டு சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
மலையைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கல்குவாரியில் சக்தி வாய்ந்த வெடிபொருள்களை பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதால், வெடித்து சிதறும் பாறைத் துண்டுகள் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது விழுகின்றன. பாறைகள் உடைப்பதால் ஏற்படும் அதிர்வு காரணமாக வீட்டுச் சுவர்களில் கீறல்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பாறைகளிலிருந்து கிளம்பும் பொடி துகள்கள் காற்றில் பரவி, அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குவாரியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கருங்கல் துணை மின் நிலையம் இருப்பதால், மின் நிலையத்துக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ் கூறுகையில், இம்மலையில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் கூறியது: கருங்கல் மலையில் விதிமுறைகளை மீறி குவாரி உள்ளது. 50 மீட்டர் தொலைவிலேயே அதிகமான குடியிருப்புகள் உள்ளன. அனுமதி வழங்கிய அதிகாரிகள், விதிமுறைகளை முறையாக பின்பற்றி இருக்க வேண்டும் என்றார் அவர்.
கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் கூறியது: இப்பகுதியில் இருந்த கால்வாய்களை நிரப்பி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் குளங்களுக்கு மழை நீர்வரத்து தடைபட்டுள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கருங்கல் மலையை பாதுகாக்க பலகட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதுகுறித்து கல்குளம் வட்டாட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தது: கருங்கல் மலை பல சர்வேயில், பல உள்பிரிவுகளில் சுமார் 500 ஏக்கர் உள்ளது. இதில், 5 தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் 5 குவாரிகள் சுமார் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன. சமீபத்தில் 3 குவாரிகளின் உரிமம் நிறைவடைந்தது. தற்போது முறைப்படி அரசு விதிமுறைகளின்படி 2 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இதுதொடர்பாக பொதுமக்களின் புகாரை விசாரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com