தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஒக்கி புயலால் ரப்பர் தோட்டங்கள் பாதிப்பு: 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ரப்பர் தோட்டங்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:24 pm

DIN

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ரப்பர் தோட்டங்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் தோவாளை,  கல்குளம்,  விளவங்கோடு என 3 வட்டங்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் ரப்பர் காடுகளில் ரப்பர் மரங்களில் பால்வடித்தல் மற்றும் அதன் உப தொழில் என  லட்சத்துக்கும் அதிகமானோர்  வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.   
கடந்த 30ஆம் தேதி வீசிய ஒக்கி புயல் ரப்பர் தோட்டங்களில் மூன்றில் ஒருபகுதியை சேதப்படுத்தியது. இதில், இளம் ரப்பர் மரங்கள் உள்பட சுமார் 20 லட்சம் ரப்பர் மரங்கள் வரை சேதமடைந்திருப்பதாக தெரியவருகிறது. அவற்றில் வயல்களில் நடவு செய்யப்பட்ட ரப்பர் மரங்கள் முழுமையாக சாய்ந்துள்ளன. 
ஒக்கி புயலால் பெரும் இழப்பை சந்தித்துள்ள நிறுவனமாக அரசு ரப்பர் கழகம் உள்ளது. ரப்பர் கழகத்தில் சுமார் 1 லட்சம் ரப்பர் மரங்கள் சாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது போன்று பெரும் தனியார் ரப்பர் தோட்டங்களிலும் அதிக எண்ணிக்கையில் ரப்பர் மரங்கள் சாய்ந்துள்ளன. சாய்ந்துள்ள ரப்பர் மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெட்டப்படும் மரங்கள் அனைத்தும் இரவு, பகலாக  கேரள மாநிலம் பெரும்பாவூரிலுள்ள பிளைவுட், ட்ரீட்வுட் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இன்னும் பல மாதங்கள் வெட்டினால் மட்டுமே சாய்ந்த மரங்களை முழுமையாக அகற்ற முடியும் என்று ரப்பர் மர வணிகர்கள் தெரிவிக்கின்றனர். 
பறிபோகும் வேலை வாய்ப்புகள்: மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களை நம்பி சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும்,  மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வரும் நிலையில், புயல் பாதிப்பால் தற்போது ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலர்  எம். வல்சகுமார் கூறியது: 50 சதவீதத்துக்கு அதிகமாக ரப்பர் மரங்கள் சாய்ந்த தோட்ட விவசாயிகள் மரங்களை முழுமையாக வெட்டி அகற்றி வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு  ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 
தடிக்காரன்கோணம் அருகேயுள்ள தனியார் ரப்பர் தோட்ட ம் அங்கு பணிபுரியும் குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு வேலையில்லை என்று நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதையடுத்து தொழிற்சங்கம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு தற்போது வாரம் ரூ. 900 நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அரசு ரப்பர் அரசு கழகத்தில் கீரிப்பாறை,  மணலோடை கோட்டங்களில் தாற்காலிக தொழிலாளர்களுக்கும் இடமாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதில் தொழிற்சங்கம் தலையிட்டு ரப்பர் கழகத்தின் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
புயலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா சிறு தோட்டங்கள், தொழிலாளர்ளுக்கு வேலை மறுப்பு தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் தொழிற்சங்கம் அதிகமாக தலையிட முடியாது.  எனவே, பிரச்னைக்கு தீர்வாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ரப்பர் விவசாயிகளுக்கும், தோட்ட நிர்வாகங்களுக்கும் சாய்ந்த மரங்களின் எண்ணிக்கை மற்றும் அந்த மரங்களின் வயது அடிப்படையில் அதிகபட்ச நிவாரணம் வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும். 
ஒரு தொழிலாளருக்கு கூட வேலையிழப்பு அல்லது வேலை பறிப்பு ஏற்படாத  வகையில் அரசு கண்காணித்து அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.