கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு, பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக கடைகள், முதல் நாளில் ரூ. 45 லட்சத்து 79 ஆயிரத்து 177-க்கு ஏலம் போனது.
கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவ.15ஆம் தேதி முதல் ஜன.17ஆம் தேதி வரையிலான காலத்தில் சபரிமலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சீசனில் பேரூராட்சி நிர்வாகம் தனது வருவாயைப் பெருக்கும் வகையில் தாற்காலிக கடைகளை அமைத்து வருகிறது.
நிகழாண்டு சன்னதி தெரு, கடற்கரைச் சாலை, சூரிய அஸ்தமனப் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 622 கடைகளை அமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து தாற்காலிக கடைகளுக்கான ஏலம் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.15 மணி வரை நடைபெற்றது.
நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் சஜித், பேரூராட்சி செயல் அலுவலர் மு.வெங்கடேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் முருகன், இளநிலை உதவியாளர் பி.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஏலம் நடைபெற்றது.
முதல் நாளன்று ஹோட்டல் ஸ்பார்சா மற்றும் சிலுவை நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக கழிப்பறைகள் முறையே ரூ. 1,70,000, ரூ. 1,77,777-க்கு ஏலம் போனது. தொடர்ந்து சன்னதி தெருவில் 25 கடைகள் ரூ. 5 லட்சத்து 72 ஆயிரத்துக்கும், கடற்கரைச் சாலை (இடது) 21 கடைகள் ரூ. 11 லட்சத்து 39 ஆயிரத்து 300-க்கும், கடற்கரைச் சாலை (வலது) 53 கடைகள் ரூ. 25 லட்சத்து 20 ஆயிரத்து 100-க்கும் ஏலம் போனது. முதல்நாளன்று மொத்தம் 99 கடைகள் மற்றும் 2 கழிப்பறைகள் சேர்த்து, ரூ. 45 லட்சத்து 79 ஆயிரத்து 177-க்கு ஏலம் போனது.
கார் பார்க்கிங் ஏலம் பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயித்த தொகையை விட ஏலதாரர்கள் குறைந்த தொகைக்கு ஏலம் கேட்டதால் இதற்கான ஏலம் மறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஏலம் நடைபெற்றதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமலிருக்க பேரூராட்சி வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.