திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை பெய்த போதிலும், ஆலங்குளம் உள்ளிட்ட வட்டாரங்களில் போதிய அளவு மழை பெய்யாததால், குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
ஆலங்குளம் வட்டம் வானம் பார்த்த பூமியாக காட்சியளித்தாலும், இப்பகுதி மக்கள் முற்றிலும் விவசாய வருமானத்தையே நம்பியியுள்ளனர். விவசாயிகள் குளம் மற்றும் கிணற்றுப் பாசனங்கள் பெருமளவில் விவசாயம் செய்கின்றனர். இப்பகுதியில் ஓராண்டு மழை பொய்த்தாலே கடுமையான வறட்சி நிலவும்.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு பருவமழையும் பொய்த்துப்போனது. இதனால் இப்பகுதி குளங்கள் வறண்டு விட்டன. கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. முக்கிய பயிர்களான நெல், பல்லாரி போன்றவை கடந்த இரு ஆண்டுகளாக இப்பகுதியில் பயிரிடப்படவில்லை. இருக்கும் தண்ணீரை வைத்து குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே, கத்தரி, தக்காளி, சுரைக்காய், வெண்டை போன்ற காய்கனிப் பயிர்களை வைத்து பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் நிகழாண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனாலும் வடகிழக்குப் பருவமழை ஒரளவு கை கொடுத்ததன் விளைவாக அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் ஆற்றங்கரையோர ஊர்கள் செழிப்படைந்தது. ஆனால் ஆலங்குளம் வட்டாரத்தில் வடகிழக்குப் பருவமழை ஓரிரு தினங்களே பெய்ததால் இப்பகுதியில் உள்ள தொட்டியன்குளம், குறிப்பன்குளம், நெட்டூர் பெரியகுளம், ஊத்துமலை பெரியகுளம் உள்பட 100-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு அறவே நீர்வரத்து இல்லை. குளங்களில் அண்மையில் கரம்பை மண் அள்ளிய பள்ளங்களில் கூட தண்ணீர் நிரம்பவில்லை என்பது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. ஆலங்குளத்தில் உள்ள தொட்டியன்குளம் வழக்கம் போல பன்றிகள், கருவேல மரங்களின் புகலிடமாகவே காட்சியளிக்கிறது.
நிகழாண்டில் போதிய மழை பெய்தால் மட்டுமே விவசாயப் பணிகளைத் தொடங்க இயலும் என்ற நிலையில், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.