கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிகளவு செல்லாத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் விதம் குறித்த முகாம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவின் போது ஏராளமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செல்லாத வாக்குகளாக பதிவு செய்துள்ளது, வாக்கு எண்ணிக்கையில் தெரியவந்துள்ளது. வாக்களிக்கும் விதம் குறித்து வாக்காளர்களுக்கு போதிய விளக்கம் கிடைக்காததால்தான் செல்லாத வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன என வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வாக்காளருக்கு 11 வாக்குகள்: கூட்டுறவு சங்கத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்படும் நிலையில் ஒரு வாக்காளர் 11 பேருக்கு வாக்களிக்க வேண்டும். இதில் பெண்கள், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் மற்றும் பொது என மூன்று உள்பிரிவுகளில் வாக்களிக்க வேண்டும்.பெண்கள் பிரிவில் 6 பெண்கள் போட்டியிடும் நிலையில் 3 பெண்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவில் 4 பேர் போட்டியிடும் நிலையில் அதில் 2 பேருக்கு வாக்களிக்க வேண்டும். பொதுப்பிரிவில் 12 பேர் போட்டியிடும் நிலையில் அதில் 6 பேருக்கு வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு வாக்காளர் 3+2+6 என்ற வகையில் மொத்தம் 11 பேருக்கு வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக வாக்களித்தால் அந்த வாக்கு செல்லாததாக ஆகிவிடும். அதே வேளையில் ஒவ்வொரு பிரிவிலும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட குறைவாக வாக்களிக்கலாம்.
விழிப்புணர்வு இல்லை: வாக்கா ளர்களிடம் வாக்களிக்கும் விதம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும், வாக்குச் சாவடி மையங்களான கூட்டுறவு அலுவலகங்களில் வாக்களிப்புக்கான விளக்கச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள போதும், செயல்விளக்க முன்னெடுப்பை அரசு மேற்கொள்ளாததுமே செல்லாத வாக்குகள் பதிவாக காரணம் என்கின்றனர் வாக்காளர்கள்.
வாக்குகள் மட்டுமே குறிக்கோள்: தற்போது கூட்டுறவு சங்கங்களில் ஒவ்வொரு கட்சியினரும் வாக்காளர்களிடம் வாக்களிக்கும் விதம் குறித்து விளக்காமல், 11 பேர் கொண்ட தங்களது அணிக்காக வாக்குக் கேட்கும் நிலையில் அவர்கள் தங்களது அணி வேட்பாளர்களின் எண்களை மட்டும் துண்டு காகிதத்தில் அச்சடித்து வாக்காளர்களுக்கு வழங்குகின்றனர்.
அந்த துண்டு காகிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எண்களில் மட்டும் வாக்குச் செலுத்துபவர்கள் பெரும்பாலும் சரியாக வாக்களிக்கின்றனர். அதே வேளையில் மொத்தமுள்ள அணிகளுக்கும் பரவலாக அல்லது கலப்பினமாக வாக்களிக்கும் வாக்காளர்களின் வாக்குகளில் பல செல்லாதவையாக மாறுகின்றன. இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது குழப்பங்களும், பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக, இந்த மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களில் செல்லாத வாக்குகள் தொடர்பான பிரச்னைகள் அதிகம் எழுந்தது. இந்நிலையில் வேட்பாளர்களின் எந்தப் பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோருக்கு வாக்களிக்கப்பட்டதோ அந்தப் பிரிவு மட்டும் நிராகரிக்கப்பட்டு இதரப் பிரிவில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் வாக்குச் சாவடிகளில் குழப்பங்கள் ஓரளவு குறைந்தன.
கற்றுக் கொடுக்க வேண்டும்: இந்நிலையில் கூட்டுறவு நிர்வாகங்கள் ஏழை விவசாயிகளாக உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் விதம் குறித்த விளக்கங்களை முகாம் அமைத்து கற்றுக் கொடுக்க
வேண்டுமென்று வாக்காளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









