
பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் போக்குவரத்து தொடக்கம்
நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் புதன்கிழமை வாகன போக்குவரத்து தொடங்கியது.
நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் புதன்கிழமை வாகன போக்குவரத்து தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வாகன போக்குவரத்து மிக்க பகுதியாக நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகள் விளங்குகின்றன. குமரி மாவட்டம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருவனந்தபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைகளில் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியதுடன், காலவிரயமும் ஏற்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சியால் பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய இரு இடங்களில் மத்திய அரசு நிதியில் ரூ.325 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த மேம்பாலப் பணி நிறைவடைந்த நிலையில் மார்த்தாண்டம் மேம்பாலம் கடந்த மாதமும், பார்வதிபுரம் மேம்பாலம் இம்மாதம் 16 ஆம் தேதியும் பொது மக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் இதனை பார்வையிட்டனர். இவ்விரு பாலத்திலும் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆயத்த கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. அப்போது பாலத்தின் மேல் ஏராளமான பாரதிய ஜனதா பிரமுகர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பாலத்தில் வரும் வாகனத்திற்கு ஆரத்தி எடுத்து போக்குவரத்தை வரவேற்றனர்.
பாலத்தில் போக்குவரத்து சேவை தொடங்கியதை அடுத்து குழித்துறை சந்திப்பு வரை இயக்கப்பட்டு வந்த இரயுமன்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, வள்ளவிளை, பனச்சமூடு, ஆறுகாணி செல்லும் பேருந்துகள் மார்த்தாண்டத்துக்கு மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டன. மார்த்தாண்டத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த களியக்காவிளை - கன்னியாகுமரி பேருந்துகளும் களியக்காவிளையிலிருந்து இயக்கப்பட்டன.
இதே போல் பார்வதிபுரத்தில் ஆங்கில ஓய் வடிவத்தில் உள்ள மேம்பாலத்திலும் வாகன போக்குவரத்து அதிகாலையில் தொடங்கியது. இதனால் நாகர்கோவிலில் இருந்து ஆசாரிப்பள்ளம், பேயோடு, இரணியல் வழியாக சுற்றி வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு குறைந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு போக்குவரத்து நெரிசல் குறைந்து நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் சீரான போக்குவரத்து நிலவியதால் இரு மேம்பாலங்களும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ஆங்கில ஓய் வடிவிலான பார்வதிபுரம் மேம்பாலத்தின் வெட்டூர்ணிமடம் வழித்தடத்தில் செல்லும் பாலம் இருவழிப்பாதையாக உள்ளது. அகலமான பரப்பில் உள்ள இந்த பாலத்தால் பயணிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே நேரம் கோட்டாறு, பார்வதிபுரம் வழித்தடத்தில் இணையும் மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக உள்ளது. நாகர்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்கள் மட்டுமே அந்த பாலத்தில் செல்லமுடியும். இதற்கான அறிவிப்பு பலகை, போக்குவரத்து காவலர்கள் உள்ளனர்.
இரவில் காவலர்களை நியமிக்க வேண்டும்: இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த பாலத்தில் ஒரு வழிப்பாதை விதியை பல வாகன ஓட்டிகள் மீறும் அபாயம் உள்ளது. போக்குவரத்து காவலர்கள் இரவில் அப்பகுதியில் இல்லாவிட்டால், திருவனந்தபுரம் வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள், கோட்டாறு, பார்வதிபுரம் வழித்தட ஒருவழிப்பாதை சாலையில் வரும் அபாயம் உள்ளது. இதனால் குறுகிய பாலத்தில் எதிரே வரும் வாகனங்களால் இரவு நேர விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க பார்வதிபுரம் ஒருவழிப்பாதை பாலத்தில் இரவில் போக்குவரத்து காவலர்களை நியமித்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





